Thirukural

ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்பொன்றாமை ஒன்றல் அரிது.

ஒருவனுடைய உற்றாரிடத்தில் பகைமை ஏற்படுமானால், அந்த உட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்போதும் அரிது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
ஒன்றாமை ஒன்றியார்கண் படின் - பகைமை, தனக்கு உள்ளாயினார் மாட்டே பிறக்குமாயின்; பொன்றாமை ஒன்றல் எஞ்ஞான்றும் அரிது - அரசனுக்கு இறவாமை கூடுதல் எஞ்ஞான்றும் அரிது. (பொருள் படை முதலிய உறுப்புக்களாற் பெரியனாய காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். இவை நான்கு பாட்டானும், அதனால் தனக்கு வரும் தீங்கு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தன் ஒன்றினார்மாட்டு ஒன்றாமை உளதாயின், எந்நாளினும் சாவாமையைக் கூடுதல் அரிது. இது நட்டோராகிய உட்பகையினால் வரும் தீமை கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
ஒன்றியார் கண் ஒன்றாமைபடின் - தனக்கு உள்ளானவரிடத்திலேயே பகைமை தோன்றுமாயின்; பொன்றாமை ஒன்றல் எஞ்ஞான்றும் அரிது - ஒருவனுக்கு இறவாமை கூடுதல் எக்காலத்திலும் அரிதாம். அரசனாயின் பொருள் படை நாடு நட்பு முதலியவற்றாலும், பிறனாயின் பொருள் சுற்றம் ஏவல் முதலியவற்றாலும், பெரியவனான காலத்தும் என்பார் ' எஞ்ஞான்றும் ' என்றார். ' ஒன்றாமை யொன்றியார் ' உள்முரண் (Oxymoron) இந் நான்கு குறளாலும் உட்பகையால் தனிப்பட்டவனுக்கும் ஒரு குடும்பத்தலைவனுக்கும் அரசனுக்கும் வருந்தீங்கு கூறப்பட்டது.
கலைஞர் உரை:
ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றி விடுமானால், அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தன்னுடன் இருப்பவரின் பகை தோன்றுமானால், ஆட்சியின் அழிவைத் தடுக்க ஒருபோதும் முடியாது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
ஒன்றேபோல் சேர்ந்து காரியம் செய்ய வேண்டியவர் களுக்குள் உட்பகை தோன்றிவிட்டால் அழிவு வராமல் இருக்கவே முடியாது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பகைமை தனக்கு உள்ளாயினாரிடத்திலேயே உண்டாகிவிடுமானால் அரசனுக்கு இறவாமை என்பது. முடியாததாகிவிடும்.
தமிழ்க்குழவி உரை:
உடன் இருப்பவர்களுக்குள் உடன்படாதவகையில் உட்பகை தோன்றின் ஒருவன் தன்னை அழிவிலிருந்து காத்துக் கொள்ளுதல் அரிது.
Translation
If discord finds a place midst those who dwelt at one before, 'Tis ever hard to keep destruction from the door.
Explanation
If hatred arises among (one's) own people, it will be hardly possible (for one) to escape death.
Transliteration
Ondraamai Ondriyaar Katpatin Egngnaandrum Pondraamai Ondral Aridhu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 886