Thirukural

உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்துமட்பகையின் மாணத் தெறும்.

உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும், தளர்ச்சி வந்த போது மட்கலத்தை அறுக்கும் கருவி போல் அந்த உட்பகை தவறாமல் அழிவு செய்யும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
உட்பகை அஞ்சித் தற்காக்க - உட்பகையாயினாரை அஞ்சித் தன்னைக் காத்துக்கொண் டொழுகுக; உலைவிடத்து மட்பகையின் மாணத்தெறும் - அங்ஙனம் ஒழுகாதவழித் தனக்கோர் தளர்ச்சி வந்தவிடத்துக் குயவன் மட்கலத்தை அறுக்கும் கருவி போல, அவர் தப்பாமற் கெடுப்பர். ('காத்தல்' அவர் அணையாமலும் அவர்க்கு உடம்படாமலும் பரிகரித்தல். மண்ணைப் பகுக்கும் கருவி 'மட்பகை' எனப்பட்டது. பகைமை தோன்றாமல் உள்ளாயிருந்தே கீழறுத்தலின்,கெடுதல் தப்பாது என்பதாம்.)
மணக்குடவர் உரை:
உடனே வாழும் பகைவரை அஞ்சித் தன்னைக் காக்க: அவர் தனக்குத் தளர்ச்சி வந்தவிடத்துக் குயவன் கலத்தை அறுங்குங் கருவிபோலத் தப்பாமல் கொல்லுவர். மட்பகை தான் அறுக்குங்கால் பிரறியாமல் நின்று அறுக்கும்.
தேவநேயப் பாவாணர் உரை:
உட்பகை அஞ்சித் தற்காக்க - உட்பகைவர்க்கு அஞ்சித் தன்னைக் காத்துக்கொள்க; உலைவிடத்து மட்பகையின் மாணத்தெறும்- ஏனெனின், அங்ஙனங் காவாவிடின், தனக்குத் தளர்ச்சி வந்த விடத்து, அவர் பகை குயவன் மட்கலத்தை யறுக்குங் கருவி அதனை யறுப்பதிலும் மிகுதியான அளவு தன்னைக் கெடுத்துவிடும். 'காத்தல்' அவரொடும் அவரொடு சேர்ந்தாரொடும் எவ்வகைத் தொடர்புமின்றியிருத்தல். மண்ணைப் பகுக்குங்கருவி 'மட்பகை' அறியப்படாது உள்ளிருந்தே கெடுத்தலால் கேட்டினின்று தப்பமுடியா தென்பதாம். 'மட்பகையின் மாணத்தெறும்' என்பதற்கு "கரை படக்கட்டிய மண் உறுதிக்கு ஒரு தளர்ச்சி வந்த இடத்து மற்று அதனை முழுவதும் முரித்து எறியும் வெள்ளம்போல், இதுவும் தன் குடி முழுதும் குலைத்து எறிந்துவிடும் என்றவாறு..... மண்பகை என்பது நீர் வெள்ளம் என்றது." என்பது காலிங்கர் உரை.
கலைஞர் உரை:
உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஒரு சோதனையான நேரத்தில் பச்சை பாண்டத்தை அறுக்கும் கருவிபோல அந்த உட்பகை அழிவு செய்துவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
உட்பகைக்கு அஞ்சித் தன்னைக் காத்துக் கொள்க; காக்காது போனால் நமக்குத் தளர்வு வந்தபோது, மண்கலத்தை அறுக்கும் கைக்கருவிபோல உட்பகையானவர் நம்மை உறுதியாக அழித்து விடுவர்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஆகையினால்) உட்பகையை நீக்கித் தற்காப்புச் செய்து கொள்ள வேண்டும். இல்லாவிடில் குயவன் மண்பாண்டத்தை அறுத்தெடுப்பதைப்போல் ஏமாந்த சமயத்தில் உட்பகை ஒருவனை அடியோடு அறுத்துவிடும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
உட்பகைக்கு அஞ்சித் தன்னைக் காத்துக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், குயவன் மட்கலத்தினை அறுக்கும் கருவிபோல மறைவாக இருந்தே கெடுத்துவிடுவர்.
தமிழ்க்குழவி உரை:
உட்பகையிலிருந்து ஒருவர் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் தளர்வு ஏற்படும்போது புதை மண் போல அழுந்தவைத்து அழித்து விடும்.
Translation
Of hidden hate beware, and guard thy life; In troublous time 'twill deeper wound than potter's knife.
Explanation
Fear internal enmity and guard yourself; (if not) it will destroy (you) in an evil hour, as surely as the tool which cuts the potter's clay.
Transliteration
Utpakai Anjiththar Kaakka Ulaivitaththu Matpakaiyin Maanath Therum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 883