|
ஒருவனுக்கு இகலால் துன்பமானவை எல்லாம் உண்டாகும்,அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியாகிய பெருமித நிலை உண்டாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
இகலான் இன்னாத எல்லாம் ஆம் ஒருவனுக்கு - மாறுபாடு ஒன்றானே இன்னாதன எல்லாம் உளவாம்; நகலான் நன்னயம் என்னும் செருக்கு ஆம் - நட்பு ஒன்றானே நல்ல நீதி என்னும் பெருஞ்செல்வம் உளதாம். (இன்னாதன - வறுமை,பழி,பாவம் முதலாயின. நகல் - மகிழ்தல். 'நகல்' என்பதூஉம் 'செருக்கு' என்பதூஉம் தத்தம் காரணங்கட்கு ஆயின. 'நயம் என்னும் செருக்கு' எனக் காரியத்தைக் காரணமாக உபசரித்தார். இவை மூன்று பாட்டானும் அவ்விருமையும் கூறப்பட்டன.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
மாறுபாட்டினாலே துன்பங்களெல்லாம் உளவாம்: உடன்பட்டு நகுதலாலே நல்ல நயமாகிய உள்ளக்களிப்பு உண்டாம்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
இகலான் இன்னாத எல்லாம் ஆம்- ஒருவனுக்கு மாறுபாடொன்றினாலேயே தீயனவெல்லாம் உண்டாகும்; நகலான் நல்நயம் என்னும் செருக்கு ஆம்- அதற்கு மறுதலையான நட்பினால் நல்ல நேர்பாடு (நீதி) என்னும் செல்வம் உண்டாகும். 'இன்னாத' வறுமை, உறுப்பறை, பழி, பளகம்(பாவம்) முதலியன. 'நகல்' 'செருக்கு' என்பன அவற்றிற்குக் கரணியமான நட்பையுஞ் செல்வத்தையுங் குறித்தன. நேர்பாடு இங்கு ஒரு செல்வமாகக் கொள்ளப் பெற்றது. இனி, 'நன்னய மென்னும் செருக்கு' என்பது பெருநன்மையாகிய செல்வம் எனினுமாம். இதில் வந்துள்ளது வேற்றுமையணி.
|
|
கலைஞர் உரை:
|
|
மனமாறுபாடு கொண்டு பகையுணர்வைக் காட்டுவோரைத் துன்பங்கள் தொடரும் நட்புணர்வோடு செயல்படுவோர்க்குப் பெருமகிழ்ச்சி எனும் நற்பயன் விளையும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
மன வேறுபாட்டால் துன்பம் எல்லாம் உண்டாகும். நல்லிணக்க நட்பால், நீதி என்னும் செல்வச் செருக்கு உண்டாகும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(சுருங்கச்சொன்னால்) எல்லாத் துன்பங்களும் உண்டாவது குரோதத்தால்தான். எல்லா நல்ல பலன்களையும் உண்டாக்கும் பெருமை வருவது நட்புக் குணத்தால்தான்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒருவனுக்கு மாறுபாடு என்னும் இகல் ஒன்றினாலே துன்பமான வைகள் எல்லாம் உண்டாகும். நட்பு என்ற ஒன்றினாலே நல்ல நீதி என்ற பெருஞ்செல்வம் உண்டாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒருவருக்கு பிரிவினை எண்ணங்களால் எல்லாத் துன்பங்களும் உண்டாகும். மற்றவர்களோடு மகிழ்ந்து வாழ்ந்தால் நன்மையோடு கூடிய பெருமிதம் உண்டாகும்
|
|
Translation
|
|
From enmity do all afflictive evils flow;
But friendliness doth wealth of kindly good bestow.
|
|
Explanation
|
|
All calamities are caused by hatred; but by the delight (of friendship) is caused the great wealth of good virtues.
|
|
Transliteration
|
|
Ikalaanaam Innaadha Ellaam Nakalaanaam
Nannayam Ennum Serukku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|