|
ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலைக் கருதமாட்டான், தனக்கு கேடு தருவிக்கொள்ளும் போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
ஆக்கம் வருங்கால் இகல் காணான் - ஒருவன் தன்கண் ஆக்கம் வரும்வழிக் காரணம் உண்டாயினும் இகலை நினையான்; கேடுதரற்கு அதனை மிகல் காணும் - தனக்குக் கேடு செய்து கோடற்கண் காரணம் இன்றியும் அதன்கண் மிகுதலை நினைக்கும். (இகலான் வருங்கேடு பிறரான் அன்றென்பது தோன்ற, 'தரற்கு' என்றார். நான்காவதும் இரண்டாவதும் ஏழாவதன்கண் வந்தன. ஆக்கக் கேடுகட்கு முன் நடப்பன, இகலினது இன்மை உண்மைகள் என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
மாறுபடுதற்குக் காரண முண்டாயினும் ஆக்கம் வருங்காலத்து மாறுபாடு காணான்: கேடு வருங்காலத்து அதனை மிகுதலைக் காணும். இம் மாறுபாடு நல்வினை யுடையார்க்குத் தோன்றாதென்றவாறு.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
ஆக்கம் வருங்கால் இகல் காணான் - ஒருவன் தனக்கு ஆக்கம் வருங்காலத்தில் மாறுபாடு கொள்ளுதற்குக் கரணியம் ஏற்படினும் அதைக் கொள்ளக் கருதான்; கேடுதரற்கு அதனை மிகல் காணும்- தனக்குக் கேட்டை வருவித்தற்குக் கரணியமின்றியும் அம்மாறுபாட்டில் மேற்படுதலைக் கருதுவான். ஆக்கம் ஊழால் வருவது தோன்ற 'வருங்கால்' என்றும், கேடும் அதனால் தானே வருவித்தல் தோன்றத் 'தரற்கு' என்றும், கூறினார். 'மிகல்காணும்' என்பதும் 'மிகலூக்கின்' என்பதுபோல ஒரு சொற்றன்மைப்பட்ட செயப்படுபொருள் குன்றாவினையாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
ஒருவன் தனக்கு நன்மை வரும்போது மாறுபாட்டை நினைக்காமலே இருப்பான். ஆனால் தனக்குத் தானே கேடு தேடிக் கொள்வதென்றால் அந்த மாறுபாட்டைப் பெரிதுபடுத்திக் கொள்வான்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஒருவனுக்கு நன்மை வரும் போது காரணம் இருந்தாலும் மனவேறுபாடு கொள்ள மாட்டான்.தனக்குத் தானேகேட்டை விளைவிக்க எண்ணுபவன், காரணம் இல்லாவிட்டாலும் மனவேறுபாடு கொள்ள எண்ணுவான்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(நன்மை வருவதோ தீமை வருவதோ இந்தக் குரோத மனப்பான்மை இல்லாமையையும் இருப்பதையும் பொறுத்ததே.) ஒருவனுக்கு நல்வாழ்வு வருவது அவனிடத்தில் குரோத புத்தி இல்லாத காலத்தில்தான்; கேடு வரும்போது அது மிகுந்திருக்கும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தனக்கு ஆக்கம் உண்டான காலத்தில் இகல் என்பதனை நினையாதான், தனக்குக் கேடு செய்வதற்கு இகலின்கண் மிகுந்து நிற்பான்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒருவன் தனக்குச் செல்வம் வருங்கால், மாறுபட்ட சிந்தனைகளுக்கு இடங்கொடான்; கேடு வருங்கால் இகலை மிகையாகக் கொள்வான்.
|
|
Translation
|
|
Men think not hostile thought in fortune's favouring hour,
They cherish enmity when in misfortune's power.
|
|
Explanation
|
|
At the approach of wealth one will not think of hatred (but) to secure one's ruin, one will look to its increase.
|
|
Transliteration
|
|
Ikalkaanaan Aakkam Varungaal Adhanai
Mikalkaanum Ketu Thararku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|