|
பேதை பெருஞ் செல்வம் அடைந்த போது ( அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் வருந்துவர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பேதை பெருஞ்செல்வம் உற்றக்கடை - பேதையாயினான் பெரிய செல்வத்தைத் தெய்வத்தான் எய்திய வழி; ஏதிலார் ஆரத் தமர் பசிப்பர் - தன்னோடு ஓர் இயைபும் இல்லாதார் நிறைய,` எல்லா இயைபும் உடைய தமராயினார் பசியாநிற்பர். (எல்லா நன்மையுஞ் செய்துகோடற் கருவி என்பது தோன்ற 'பெருஞ்செல்வம்' என்றும், அதனைப் படைக்கும் ஆற்றல் இல்லாமை தோன்ற 'உற்றக்கடை' என்றும், எல்லாம் பெறுதல் தோன்ற 'ஆர' என்றும், உணவும் பெறாமை தோன்றப் 'பசிப்பர்' என்றும் கூறினார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அயலார் உண்ண, உற்றார் பசியாநிற்பர்; பேதையானவன் பெரிய செல்வத்தை உற்றவிடத்து. இதுபேதை பொருள்பெற்றால் வழங்குந்திறங் கூறிற்று.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பேதை பெருஞ்செல்வம் உற்றக்கடை - பேதையானவன் ஊழ்வயத்தாற் பெருஞ்செல்வம் பெற்றவிடத்து; ஏதிலார் ஆரத் தமர் பசிப்பர் - தன்னோடு ஒரு தொடர்பு மில்லாத அயலார் நிரம்ப வுண்ணத் தன் குடும்பத்தாரும் நெருங்கிய உறவினரும் உண்ணுதற்கின்றிப் பசியோடிருப்பர். எல்லா நுகர்ச்சியும் பெறுதற்கேற்றதென்பது தோன்றப் 'பெருச்செல்வம்' என்றும், அது சொந்தத் தேட்டன்றித் தெய்வத்தால் வந்ததென்பது தோன்ற 'உற்றக்கடை' என்றும், எல்லாவகையிலும் இன்பம் நுகர்தல் தோன்ற 'ஆர' என்றும், உறவினர் உணவுமின்றி வருந்துதல் தோன்றப் 'பசிப்பர்' என்றும், கூறினார். ஊரெங்கும் பேர், வீடு பட்டினி, தமக்கை கிண்ணிப் பிச்சையெடுக்கத் தம்பி கும்பகோணத்திற் கோதானம் பண்ணுகின்றான். என்னும் பழமொழிகள் இங்குக் கருதத்தக்கன. இக்குறளால், பேதை பெற்ற செல்வம் தமர்க்கன்றிப் பிறர்க்கே பயன்படுமென்பது கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
அறிவில்லாப் பேதைகளிடம் குவியும் செல்வம், அயலார் சுருட்டிக் கொள்ளப் பயன்படுமேயல்லாமல் பசித்திருக்கும் பாசமுள்ள சுற்றத்தாருக்குப் பயன்படாது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அறிவற்றவன் பெருஞ்செல்வத்தை அடைந்தபோது பிறர் அதை அனுபவிக்க, அவன் உறவினர் பசித்திருப்பர்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
முட்டாள் ஒருவன் பெருஞ்செல்வத்தை அடைந்தாலும் அதனால் அவனுக்கு அன்னியமானவர்களே வயிறார உண்ண, உறவினர்களும் நண்பர்களும் பட்டினி கிடப்பார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பேதையானவன் பெரிய செல்வத்தினைப் பெற்றுவிட்டால் தன்னோடு யாதொரு தொடர்பும் இல்லாதவர்கள் பயனடைவார்கள். எல்லாத் தொடர்பும் கொண்ட சுற்றத்தார் பசித்திருப்பர்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பேதையார் ஒருவர் பெருஞ்செல்வத்திற்கு அதிபதி ஆயின், தொடர்பில்லாதார் அனுபவித்து மகிழ தம் சுற்றத்தார் பசித்திருந்து துன்புறுவர்.
|
|
Translation
|
|
When fools are blessed with fortune's bounteous store,
Their foes feed full, their friends are prey to hunger sore.
|
|
Explanation
|
|
If a fool happens to get an immense fortune, his neighbours will enjoy it while his relations starve.
|
|
Transliteration
|
|
Edhilaar Aarath Thamarpasippar Pedhai
Perunjelvam Utrak Katai
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|