|
நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாதப் பேதைப் போல் வேறு பேதையர் இல்லை.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
ஓதி - மனமொழி மெய்கள் அடங்குதற்கு ஏதுவாய நூல்களை ஓதியும்; உணர்ந்தும் - அவ்வடக்கத்தான் வரும் பயனை உணர்ந்தும்; பிறர்க்கு உரைத்தும் - அதனை அறியலுறப் பிறர்க்கு உரைத்தும்; தான் அடங்காப் பேதையின் - தான் அவையடங்கி ஒழுகாத பேதைபோல; பேதையார் இல் - பேதையார் உலகத்து இல்லை. (உம்மை முன்னும் கூட்டப்பட்டது. இப்பேதைமை தனக்கு மருந்தாய இவற்றால் தீராமையானும், வேற்று மருந்து இன்மையானும், 'பேதையின் பேதையார் இல்' என்றார். இவை இரண்டு பாட்டானும் பேதையது தொழில் பொதுவகையான் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையால் கூறுப.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நூல்களைக் கற்றறிந்தும் அவற்றைப் பிறர்க்கு இசையச் சொல்லியும், தான் அடங்குதலைச் செய்யாத பேதையார்போலப் பேதையார் உலகத்தில் இல்லை.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
ஓதியுணர்ந்தும் - அடங்கியொழுகுதற் கேதுவான அறநூல்களைக் கற்று அவற்றின் பொருளையும் பயனையும் தெளிவாக அறிந்தும்; பிறர்க்கு உரைத்தும் - அவற்றைப் பிறர்க்கு விளங்க எடுத்துச் சொல்லியும்; தான் அடங்காப் பேதையின் - தான் அவற்றின்படி அடங்கியொழுகாத பேதைபோல; பேதையார் இல் - பேதையார் உலகத்தில் இல்லை. பேதையார் இயல்பாக நல்லதையறியும் ஆற்றலில்லாதார். அறிவு நூல்களைக்கற்று அவற்றால் நல்லதையுணர்ந்ததொடு, அதைப் பிறர்க்கு எடுத்துரைத்தும் தான் அதைக் கடைப்பிடிக்காதவன் இருமடிப்பேதையாதலின், அறியாப் பேதையின் அறிந்த பேதை கடைப்பட்டவன் என்பதை யுணர்த்தற்குப் 'பேதையிற் பேதையாரில்' என்றார்.
|
|
கலைஞர் உரை:
|
|
படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்கு உணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறு நடக்காமலிருந்தால் அவர்களைவிடப் பேதைகள் யாரும் இருக்க முடியாது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
படித்தும், படித்தவற்றை உணர்ந்தும், மற்றவர்க்குச் சொல்லியும், அவற்றின்படி வாழாதவரைக் காட்டிலும் அறிவற்றவர் வேறு இல்லை.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
பல நூல்களைப் படித்திருந்தும் படித்ததை உணர்ந் திருந்தும், படித்த அறிவைப் பிறருக்கு உபதேசம் செய்தும், தான் அக்கல்வியறிவுக்கு ஏற்றபடி அடங்கி நடக்காத முட்டாளைவிடப் பெரிய முட்டாள் யாருமில்லை.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நல்ல நூல்களைச் கற்றிருந்தும் அதன் பொருளினை உணர்ந்திருந்தும் மற்றவர்களுக்கு எடுத்துக்கூறியும் தான் அடங்கி நடக்காத பேதையைப் போலி பேதையார் உலகத்தில் இல்லை.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நூல்களைக் கற்றுணர்ந்தும், கற்றவற்றைப் பிறர்க்கு எடுத்துரைத்தும், தான் அவற்றைப் பின்பற்றி வாழாத பேதையார் போல் பேதையார் இல்லை.
|
|
Translation
|
|
The sacred law he reads and learns, to other men expounds,-
Himself obeys not; where can greater fool be found? .
|
|
Explanation
|
|
There are no greater fools than he who, though he has read and understood (a great deal) and even taught it to others, does not walk according to his own teaching.
|
|
Transliteration
|
|
Odhi Unarndhum Pirarkkuraiththum Thaanatangaap
Pedhaiyin Pedhaiyaar Il
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|