|
அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டையாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நேரா நிரந்தவர் நட்பு - கூடாதிருந்தே தமக்கு வாய்க்கும் இடம் பெறுந்துணையும் கூடியொழுகுவார் நட்பு; சீர் இடம் காணின் எறிதற்குப் பட்டடை - அது பெற்றால் அற எறிதற்குத் துணையாய பட்டடையாம். (எறியும் எல்லை வாராமுன் எல்லாம் தாங்குவது போன்றிருந்து வந்துழி அற எறிவிப்பதாய பட்டடைக்கும் அத்தன்மைத்தாய நட்பிற்கும் தொழிலொப்புமை உண்மையான்,அதுபற்றி அந்நட்பினைப் பட்டடையாக உபசரித்தார். 'தீர்விடம்'என்று பாடம் ஓதி, 'முடிவிடம்' என்று உரைப்பாரும்உளர்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
முடியுமிடங்காணின் மற்றொருவன் எறிதற்குப் பட்டடையாம்; மனத்தினால் ஒவ்வாது புறத்து வேறுமிகச் செய்து வந்தாரது நட்பு. இது கருமங்காரணமாக நட்டாரோடு கூடும் திறங் கூறிற்று. பட்டடையாவது தான் தாங்குவது போல நின்று வெட்டுவார்க்கு உதவி செய்வது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நேரா நிரந்தவர் நட்பு-அகத்திற் கலவாது புறத்திற் கலந்தொழுகுவாரின் நட்பு; சீர் இடம் காணின் எறிதற்குப் பட்டடை-சிறந்த சமையம் வாய்ப்பின் தாக்குவதற்குப் பட்டடை போல் உதவுவதாம். தக்க சமையம் வரும்வரை உதவி செய்யும் நண்பர்போல் இருந்துவிட்டு அது வந்தவுடன் தாக்குவாரின் நட்பு, அடிப்பதற்கு முன்பெல்லாம் ஒரு கனிய (உலோக)ப் பொருளைத் தாக்குவது போலிருந்து பின்பு அதை ஓங்கியுறைத்தடித்தற்கு உதவும் பட்டடை போன்றிருத்தலால், அதைப்பட்டடை யென்றே சார்த்திக் கூறினார். தீர்விடமென்று பாடமோதி முடியுமிடமென்று மணக்குடவர் உரைப்பது சரியன்று. பட்டுதல் அடித்தல். பட்டுதற்கு அடைபட்டடை.
|
|
கலைஞர் உரை:
|
|
மனதார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நடிப்பவரின் நட்பானது, ஒரு கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை போல் இருக்கும் பட்டடைக் கல்லுக்கு ஒப்பாகும்
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பானது, பொருளைத் தாங்குவதுபோல் தோன்றினாலும் பொருளை வெட்டி எறிவதற்குத் துணை செய்யும் பட்டடை போன்றது
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
பகைவராக இருந்தவர்கள் திடீரென்று கலந்து நட்பாட வந்தால், அது தக்க சமயம் பார்த்து நம்மை நசுக்குவதற்குப் பட்டடைக் கல்லென்று எச்சரிக்கை கொள்ள வேண்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
மனத்தால் கூடாதிருந்து தீமையினைச் செய்வதற்குத் தக்க நேரம் வரும் வரையில் நட்பினர் போலப் பழகும் நட்பு, வாய்க்குமிடம் கண்டால் நன்றாக எறிதற்குத் துணையான பட்டடை போன்றதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
மனம் ஒன்றாது பழகும் நட்பு ஒரு பட்டடைக் கல் போல் தாங்கி வாய்ப்பு வருங்கால் தாக்கி அழிக்கும் தன்மையது.
|
|
Translation
|
|
Anvil where thou shalt smitten be, when men occasion find,
Is friendship's form without consenting mind.
|
|
Explanation
|
|
The friendship of those who behave like friends without inward affection is a weapon that may be thrown when a favourable opportunity presents itself.
|
|
Transliteration
|
|
Seeritam Kaanin Eridharkup Pattatai
Neraa Nirandhavar Natpu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|