|
இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
இனம்போன்று இனமல்லார் கேண்மை - தமக்கு உற்றார் போன்று உறாதாரோடு உளதாய நட்பு; மகளிர் மனம்போல வேறுபடும் - இடம் பெற்றால் பெண்பாலார் மனம் போல வேறுபடும். (அவர் மனம் வேறுபடுதல் 'பெண்மனம் பேதின்று ஒருப்படுப்பேன் என்னும் எண்ணில் ஒருவன்' (வளையாபதி புறத்திரட்டு-பேதைமை,18) என்பதனானுமறிக. நட்பு வேறுபடுதலாவது பழைய பகையேயாதல். இவை இரண்டு பாட்டானும் கூடா நட்பினது குற்றம் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நட்டோர் போன்று மனத்தினான் நட்பில்லாதார் நட்பு, பெண் மனம்போல வேறுபடும்; ஆதலால், அவருள்ளக் கருத்தறிந்து கொள்க. இது நட்பாயொழுகுவாரது உள்ளக்கருத்தறிய வேண்டு மென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
இனம் போன்று இனம் அல்லார் கேண்மை - இனத்தார் போன்றிருந்து உண்மையில் இனத்தார்க்குரிய அன்பில்லாத கரந்த பகைவர் நட்பு; மகளிர் மனம்போல வேறுபடும் - விலைமகளிர் மனம்போல வேறுபடும். நட்பு வேறுபடுதலாவது கரந்த பகை வெளிப்படையாதல். மகளிர் என்னும் பொதுச்சொல் இடத்திற்கேற்ப விலைமகளிரைக் குறித்தது. விலைமகளிர் காதல் போலக் கரந்த பகைவர் நட்பு வேறுபடுமென்பதாம். முன்னவர் பன்முறையும் பின்னவர் ஒருமுறையும் வேறுபடுவதே வேற்றுமை.
|
|
கலைஞர் உரை:
|
|
உற்றாராக இல்லாமல் உற்றார்போல நடிப்பவர்களின் நட்பு, மகளிருக்குரிய நற்பண்பு இல்லாமல் அப்பண்பு உள்ளவர் போல நடிக்கும் விலை மகளிரின் மனம்போல உள்ளொன்றும் புறமொன்றுமாக இருக்கும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
வேண்டியவர் போலத் தோன்றி, மனத்தால் வேண்டாதவராக இருப்பவரோடு உண்டான நட்பு பாலியல் தொழிலாளர் மனம் போல வேறுபடும்
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஏனெனில்) நண்பரைப் போல நடிக்கும் நண்பரல்லாத பகைவர் நட்புக் கொண்டாடுவது மனைவியைப் போலவே நடிக்கும் மனைவியல்லாத வேசியின் மனம்போல் வேறு நோக்க முள்ளதாக இருக்கும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
உற்றார் போன்று காட்டித் தமக்கு இனமல் லாதவர்களுடைய நட்பு இடம் பெற்றால் பெண்பாலா ருடைய மனம்போல வேறுபடும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
இணங்கியிருப்பவர் போல் பழகி இணக்கமில்லாதவர் நட்பு விலை மகளிர் மனம் போல மாறுபடும் தன்மையது.
|
|
Translation
|
|
Friendship of those who seem our kin, but are not really kind.
Will change from hour to hour like woman's mind.
|
|
Explanation
|
|
The friendship of those who seem to be friends while they are not, will change like the love of women.
|
|
Transliteration
|
|
Inampondru Inamallaar Kenmai Makalir
Manampola Veru Patum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|