|
தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து, பலர் கூடிய மன்றத்தில் பழித்து பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விட வேண்டும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு - தனியே மனைக்கண் இருந்துழி நட்பாடிப் பலரோடு மன்றின்கண் இருந்து பழி கூறுவார் நட்பு; எனைத்தும் குறுகுதல் ஓம்பல் - சிறிதாயினும் தம்மை நணுகுதலைப் பரிகரிக்க. (மனைக்கண் கெழுமலும் மன்றின்கண் பழித்தலும் தீது ஆகலின், அவர் ஒருகாலும் தம்மை நணுகா வகை குறிக்கொண்டு காக்க என்பார், அவர் நட்பின்மேல் வைத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் வஞ்சர் நட்பின் தீமை கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
மனையின்கண் நட்டோராயிருந்து, மன்றின்கண் குற்றம் கூறுவாரது நட்பைச் சிறிதும் செறிதலைத் தவிர்க. இது புறங்கூறுவார் நட்புத் தீதென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
மனைக் கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு-இல்லத்தில் தனியே யிருக்கும்போது அன்பர்போல் நட்பாடி, அம்பலத்திற் பலரோடு கூடியிருக்கும்போது பகைவர்போற் பழிகூறுவார் நட்பு, எனைத்தும் ஓம்பல்-எள்ளளவுந் தம்மை அணுகாதபடி காத்துக்கொள்க. தனித்திருக்கும்போது பழிப்பினும் பிறரோடு கூடியிருக்கும் போது புகழ்வதே நல்ல நண்பர் செயலாம். அதற்கு மாறாக விருப்பதொடு கண்முன் துணிந்து முரண்படுவதால், அவர் பகைவரொடு கூடி அழிவுண்டாக்காதவாறு முழுவிழிப்புடன் முற்காப்பாக விருக்க வேண்டுமென்பார் எனைத்துங் குறுகுதல் ஓம்பல் என்றார். கெழீஇ இன்னிசை யளபெடை.
|
|
கலைஞர் உரை:
|
|
தனியாகச் சிந்திக்கும் போத இனிமையாகப் பழகிவிட்டுப் பொது மன்றத்தில் பழித்துப் பேசுபவரின் நட்பு தம்மை அணுகாமல் விலக்கிக் கொள்ளப்படவேண்டும்
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நம் வீட்டுக்குள் வந்து நட்புக் கொண்டாடிப் பலர் இருக்கும் சபையில் நம்மைப் பழிப்பவரின் தொடர்பைச் சிறிதளவும் சேரவிட வேண்டா.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(மிகவும் குறிப்பாக விலக்க வேண்டிய தீ நட்பு இதுதான்;) வீட்டுக்குள் தனித்திருக்கும்போது கொஞ்சிக் குலவிப் புகழ்ந்துவிட்டு வெளியே போய்த் தூற்றுகிறவர்களைப் பக்கத்திற் கூட நெருங்க விடக்கூடாது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தனித்து வீட்டிலிருக்கும்போது நெருங்கிய நட்புடன் பழகி, பலர் கூடியிருக்கும் மன்றத்தில் பழித்துப் பேசுவோர் நட்புச் சிறிதளவேனும் தம்மைச் சாராமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
இல்லத்தில் இருக்கும் போது இனிதுபேசி பொது இடங்களில் பழித்துப் பேசும் தன்மையுடையவரின் நட்பைத் தவிர்த்து விடல் வேண்டும்.
|
|
Translation
|
|
In anywise maintain not intercourse with those,
Who in the house are friends, in hall are slandering foes.
|
|
Explanation
|
|
Avoid even the least approach to a contraction of friendship with those who would love you in private but ridicule you in public.
|
|
Transliteration
|
|
Enaiththum Kurukudhal Ompal Manaikkezheei
Mandril Pazhippaar Thotarpu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|