|
செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்கு கனவிலும் துன்பம் தருவதாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
வினை வேறு சொல் வேறு பட்டார் தொடர்பு - வினையும் சொல்லும் ஒவ்வாது வேறு வேறாயிருப்பார் நட்பு; கனவினும் இன்னாது - நனவின் கண்ணே அன்றிக் கனவின் கண்ணும் இன்னாது. (வினை, சொற்களது ஒவ்வாமை முதல்மேல் ஏற்றப்பட்டது. அஃதாவது, வினையிற் பகைவராய்ச் சொல்லின் நட்டாராயிருத்தல். நிகழ்வின்கண் உளதாயிருத்தலால் 'கனவினும் இன்னாது' என்றார். உம்மை எச்ச உம்மை, இழிவு சிறப்பு உம்மையும் ஆம். மன்னும் ஓவும் அசை நிலை.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
செய்யுந்தொழில் வேறாகச் சொல்லுங்கூற்று வேறாக, ஒழுகுவாரது நட்பு, பயன்படும் நனவின்கண்ணேயன்றிக் கனவின் கண்ணும் இன்னாது. இது பொய்கூறுவார் நட்புத் தீதென்றது
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
சொல்வேறு வினைவேறு பட்டார் தொடர்பு-சொல்லொன்றுஞ் செயலொன்றுமா யிருப்பவரின் நட்பு-கனவினும் இன்னாது - நனவில் மட்டுமன்றிக் கனவில் நினைப்பினும் துன்பந்தருவதாம். சொல்வேறு வினைவேறு படுதலாவது சொல்லளவில் நண்பராகவும் செயலளவிற் பகைவராகவுமிருத்தல். மதியொடும் மனச் சான்றொடும் கூடாத தூக்கநிலையிலும் துன்பந்தருமென்று, அதன் கொடுமை கூறியவாறு. எச்சவும்மை தொக்கது. 'மன்' 'ஓ' அசை நிலைகள்.
|
|
கலைஞர் உரை:
|
|
சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதவரின் நட்பு கனவிலேகூடத் துன்பத்தைத்தான் கொடுக்கும்
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
சொல் ஒன்று, செயல் வேறாக இருப்பவரின் நட்பு கனவிலும் கூடத் துன்பமானதாகும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(சொல்வது ஒன்று செய்வது வேறொன்றாக உள்ளவர் களுடைய உறவு மிகவும் தீய நட்பு.) செய்வது ஒன்று சொல்லுவது வேறு என்ற நடத்தையுள்ளவர்களுடைய உறவு கனவிற் கூடத் துன்பமுண்டாக்கும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் இருப்பவர்களுடைய நட்பானது கனவில்கூடத் துன்பத்தினைத் தருவதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
சொல்வேறு செயல்வேறாகக் கொண்டொழுகும் தன்மையரின் நட்பானது கனவில் கூடத் துன்பத்தையே தரும்
|
|
Translation
|
|
E'en in a dream the intercourse is bitterness
With men whose deeds are other than their words profess.
|
|
Explanation
|
|
The friendship of those whose actions do not agree with their words will distress (one) even in (one's) dreams.
|
|
Transliteration
|
|
Kanavinum Innaadhu Manno Vinaiveru
Solveru Pattaar Thotarpu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|