|
முடியும் செயலையும் முடியாத படி செய்து கெடுப்பவரின் உறவை, அவர் அறியுமாறு ஒன்றும் செய்யாமலே தளரச் செய்து கைவிட வேண்டும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை - தம்மான் முடியும் கருமத்தை முடியாததாக்கிச் செய்யாதாரோடு கொண்ட நட்பினை; சொல்லாடார் சோர விடல் - அது கண்டால் அவரறியச் சொல்லாதே சோர விடுக. (முடியாதாக்குதல்: முடியாதாக நடித்தல். சோரவிடல்: விடுகின்றவாறு தோன்றாமல் ஒரு காலைக்கு ஒருகால் ஓய விடுதல். அறியச் சொல்லினும் விடுகின்றவாறு தோன்றினும் அதுபொழுது பரிகரித்துப் பின்னும் நட்பாயொழுகக் கருதுவர் ஆகலின், 'சொல்லாடார்' என்றும், 'சோரவிடல்': என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் முறையே பேதையார், நகுவிப்பார், இயல்வது செய்யாதார் என்பவர்கள் நட்பின் தீமை கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தம்மாலியலும் கருமத்தை முடியாது வருத்துமவர் நட்பை, நட்பென்று சொல்லுவதும் செய்யாராய் வீழவிடுக. இஃது அழுக்காறுடையார் நட்புத் தீதென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
'ஒல்லும் கருமம் உடற்றுபவர்' கேண்மை-ஆகும் செயலையும் ஆகாததாக்கிக் கெடுப்பவரின் நட்பை; சொல்லாடார் சோரவிடல்-அவருக்குச் சொல்லாமலே மெல்ல மெல்லத் தளரவிடுக. இனி, 'ஒல்லும் கருமம் உடற்றுபவர்' என்பதற்கு, தம்மால் இயலுங் கருமத்தையும் இயலாததாகக்காட்டி நடிப்பவர் என்று உரைப்பினுமாம். சோரவிடலைத் தெரிவிப்பின் ஏதேனுஞ் சூழ்ச்சி செய்து அதைத் தடுப்பராதலின், 'சொல்லாடார்' என்றும், நீண்ட காலத்தின்பின் தாமே அறிந்துகொள்ளுமாறு மெல்ல மெல்லத் தளரவிடுக என்பார் 'சோரவிடல்' என்றும், கூறினார். 'சொல்லாடார்' எதிர்மறை முற்றெச்சம். எச்சவும்மை தொக்கது.
|
|
கலைஞர் உரை:
|
|
நிறைவேற்றக் கூடிய செயலை, நிறைவேற்ற முடியாமல் கெடுப்பவரின் உறவை, அவருக்குத் தெரியாமலேயே மெல்ல மெல்ல விட்டு விட வேண்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தம்மால் செய்யக்கூடிய உதவியையும் செய்ய முடியாதவர் போல் நடித்துச் செய்யாமல் விடுபவரின் நட்பை அவரிடம் சொல்லாமலேயே விட்டுவிடுக.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(தெரியாத காரியத்தைத் தெரிந்தவர்கள்போல் வந்து கெடுத்துவிடக் கூடியவர்களுடைய நட்பும் சிறுகச் சிறுக விட்டுப் போவதே நல்லது.) முடியக்கூடிய எளிய காரியத்தையும் முடியாமற் செய்துவிடக்கூடிய திறமையற்றவர்களுடைய உறவைப் பேசாமல் விட்டுவிட வேண்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தம்மால் செய்து முடிக்கக் கூடிய செயல்களை யும் முடியாதென்று இருப்பவர்களுடன் கொண்ட நட்பினைக் கண்டால் சொல்லாமலேயே கைவிடுதல் வேண்டும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
எளிதில் செய்து முடிக்கக் கூடிய செயலையும் செய்து கொண்டிருக்கும் பொழுது இடையூறு செய்யும் நட்பினைச் சொல்லாமலே விட்டுவிடல் நன்று.
|
|
Translation
|
|
Those men who make a grievous toil of what they do
On your behalf, their friendship silently eschew.
|
|
Explanation
|
|
Gradually abandon without revealing (beforehand) the friendship of those who pretend inability to carry out what they (really) could do.
|
|
Transliteration
|
|
Ollum Karumam Utatru Pavarkenmai
Sollaataar Sora Vital
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|