|
(அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பை விட, பகைவரால் வருவன பத்துகோடி மடங்கு நன்மையாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நகை வகையர் ஆகிய நட்பின் -தாம் அறிதல் வகையாகாது நகுதல் வகையராதற்கு ஏதுவாகிய நட்பான் வருவனவற்றின்; பகைவரான் பத்து அடுத்த கோடி உறும் - பகைவரான் வருவன பத்துக்கோடி மடங்கு நல்ல. (நட்பு : ஆகுபெயர். அந்நட்பாவது விடமரும், தூர்த்தரும், வேழம்பரும் போன்று பலவகையான் நகுவித்துத் தாம் பயன் கொண்டு ஒழிவாரோடு உளதாயது. 'பகைவரான்' என்பது அவாய் நிற்றலின், 'வருவன' என்பது வருவிக்கப்பட்டது. பத்து அடுத்த கோடி: பத்தாகத் தொகுத்த கோடி. அந்நட்பான் வரும் இன்பங்களின் அப்பகைவரான் வரும் துன்பங்கள் இறப்ப நல்ல என்பதாம். இதற்குப் பிறரெல்லாம் சொல்லிலக்கணத்தோடு மாறு கொள உரைத்தார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நகையின் பகுதியார் செய்த நட்பினும், பகைவராலே பத்துக்கோடி மடங்கு நன்மை மிகும். நகைவகையர்- காமுகர், வேழம்பர் முதலாயினார். இஃது இவர்கள் நட்புத் தீதென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நகை வகையர் ஆகிய நட்பின் - தாம் அறிவடையும் வகையினராகாது சிரித்து மகிழும் வகையினராதற்கு ஏதுவாகிய நட்பால் வரும் இன்பத்தினும்; பகைவரால் பத்து அடுத்த கோடி உறும்-பகைவரால் வருந்துன்பம் பத்துக்கோடி மடங்கு நல்லதாம். நகை வகையராக்குவார் பிறருக்கு அறிவூட்டாது அவரைச் சிரித்து மகிழவைப்பதையே தொழிலாகக்கொண்டு பொருள்பெறும் குறும்பர், காமுகர், நகை வேழம்பர் (கோமாளிக் கூத்தர்) முதலியோர். அவர் நட்பு மிகத்தீயது என்பது கருத்து. பத்தடுத்த கோடியுறும் என்பது வலியுறுத்தல் பற்றிவந்த உயர்வு நவிற்சி. ஆகியநட்பு ஆதற்கேதுவான நட்பு. 'நட்பு' ஆகுபொருளி. 'வருந்துன்பம்' என்பது அவாய்நிலையால் வந்தது.
|
|
கலைஞர் உரை:
|
|
சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும் பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
சிரித்துச் செல்லும் இயல்பினராகிய நட்பைக் காட்டிலும், பகைவரால் வருவன பத்துக் கோடி மடங்கு நன்மையாம்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(பழிப்புக்கிடமான வாழ்க்கையுடையவர்களுடைய நட்பும் மிகவும் தீமையானது.) நிந்தனைக்குரிய வகையைச் சேர்ந்தவர்களுடைய நட்பைவிடப் பகைவர்களால் பத்துக் கோடி மடங்கு நன்மை உண்டு.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அறிய வேண்டியதை அறியாமல் எப்போதும் நகைத்துக் கொண்டு மட்டும் இருக்கின்ற நட்பினால் வருவதைவிடப் பகைவரால் வருவது பத்துக் கோடி மடங்கு நல்லதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அன்பில்லாமல், சிரித்து மகிழ்வதை நட்பாகக் கருதிப் பழகுபவரைவிட, பகைமை உடைய ஒருவரால் பத்துக் கோடி நன்மை உண்டாகலாம்.
|
|
Translation
|
|
From foes ten million fold a greater good you gain,
Than friendship yields that's formed with laughers vain.
|
|
Explanation
|
|
What comes from enemies is a hundred million times more profitable than what comes from the friendship of those who cause only laughter.
|
|
Transliteration
|
|
Nakaivakaiya Raakiya Natpin Pakaivaraal
Paththatuththa Koti Urum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|