Thirukural

பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்ஏதின்மை கோடி உறும்.

அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பை விட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பேதை பெருங்கெழீஇ நட்பின் - அறிவிலானது மிகச் சிறந்த நட்பின்; அறிவுடையார் ஏதின்மை கோடி உறும் - அறிவுடையானது பகைமை கோடி மடங்கு நன்று.( 'கெழீஇய' என்பதன் இறுதி நிலை விகாரத்தால் தொக்கது. பன்மை உயர்த்தற்கண் வந்தது. அறிவுடையான் பகைமை ஒருதீங்கும் பயவாமையாaனும், பேதை நட்பு எல்லாத் தீங்கும் பயத்தலானும், 'கோடி உறும்' என்றார். 'பெருங்கழி நட்பு'என்று பாடம் ஓதுவாரும் உளர்.)
மணக்குடவர் உரை:
அறிவில்லாதார் மிகவும் கெழுமிய நட்பாகுமதனினும், அறிவுடையார் பகைமை கோடிமடங்கு மிக்க நன்மையை உண்டாக்கும். இது பேதைமையார் நட்புத் தீமை பயக்கு மென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
பேதை பெருங் கெழீஇ நட்பின் - அறிவிலானது மிக நெருங்கிய நட்பினும்; அறிவுடையார் ஏதின்மை கோடி உறும் - அறிவுடையானின் பகைமை கோடி மடங்கு நல்லதாம். பேதை நட்பு பல்வகைத் தீங்கை விளைத்தலானும், அறிவுடையான் பகை ஒரு தீங்கும் விளைவிக்காமையானும், ' கோடியுறும் ' என்றார். பன்மை உயர்வு பற்றி வந்தது. ஏதின்மை' இங்கு ஏதும் அன்பின்மை. கெழி நட்பு. "ஒருவன் கெழியின்மை கேட்டாலறிக" என்பது நான்மணிக் கடிகை (93). கெழீஇ என்பது கெழி என்பதன் அளபெடை வடிவம். பகைவனைக் கெழீஇயிலி என்பது இலக்கிய வழக்கு (தொல். சொல். 57, இளம். உரை). பெருங்கெழீஇ நட்பு என்பது பேருழுவலன்பு என்பது போன்ற பல்சொற்றொடர். "பெருங்கழிநட்பென்று பாடமோதுவாருமுளர்." என்றார் பரிமேலழகர். அது பெருங்கெழி நட்பு என்றுமிருந்திருக்கலாம். "கெழீஇய வென்பத னிறுதிநிலை விகாரத்தாற் றொக்கது." என்று கொள்ளத் தேவையில்லை.
கலைஞர் உரை:
அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட, அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு மேலானதாகும்
சாலமன் பாப்பையா உரை:
அறிவற்றவனின் மிக நெருக்கமான நட்பைக் காட்டிலும் அறிவுடையார்களின் பகை, கோடி நன்மையாம்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அறிவில்லாத முட்டாள்களின் உறவும் தீயது.) மூடனுக்கு நெருங்கிய நண்பன் என்று சொல்லிக்கொள்வதைவிட அறிவாளியுடன் மனத்தாபமுடையவனாக இருப்பது கோடி மடங்கு நல்லது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
அறிவில்லாத பேதையினுடைய மிக நெருங்கிய நட்பினைவிட அறிவுடையவர்களது பகைமை கோடி மடங்கு நல்லதாகும்.
தமிழ்க்குழவி உரை:
அறிவில்லாத பேதையர் பால் கொண்டொழுகும் நட்பை விட அறிவுடையாரின் பகைமை கூட கோடி நலம் தருவதாக அமையும்.
Translation
Better ten million times incur the wise man's hate, Than form with foolish men a friendship intimate.
Explanation
The hatred of the wise is ten-million times more profitable than the excessive intimacy of the fool.
Transliteration
Pedhai Perungezheei Natpin Arivutaiyaar Edhinmai Koti Urum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 816