Thirukural

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மைஎய்தலின் எய்தாமை நன்று.

காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதை விட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
செய்து ஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை - செய்து வைத்தாலும் அரணாகாத கீழ் மக்களது தீ நட்பு; எய்தலின் எய்தாமை நன்று - ஒருவர்க்கு உண்டாதலின் இல்லையாதல் நன்று. (சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. அரணாகாமை - தொலைவின்கண் விட்டு நீங்குதல். 'எய்தலின் எய்தாமை நன்று' என்பதற்குமேல் உரைத்தாங்கு உரைக்க. 'சாராத' என்னும் பெயரெச்சம் கேண்மை என்னும் பெயர் கொண்டது, 'சிறியவர்' என்பதனைக் கொள்ளின், 'செய்து' என்பது நின்று வற்றும். இவை இரண்டு பாட்டானும் தெலைவில் துணையாகாத நட்பின் தீமை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
நட்புச் செய்தாலும் தனக்குப் பாதுகாவலாதல் இல்லாத புல்லியாரது புல்லிய நட்பைப் பெறுவதினும் பெறாமை நன்று. இது சிறியார் நட்புத் தீமைதருமென்றது. சிறியார்- சூதர், வேட்டைக்காரர், பெண்டிர் போல்வார்.
தேவநேயப் பாவாணர் உரை:
செய்து ஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை - பாதுகாப்புத் தருமென்று கருதிச் செய்துவைத்தாலும் பாதுகாப்பாகாத கீழோரது தீ நட்பு; எய்தலின் எய்தாமை நன்று - பெற்றிருப்பதிலும் பெற்றிராமையே நல்லது. 'எய்தலினெய்தாமை நன்று' என்பதைத் ' தமரிற் தனிமை தலை' என்பதுபோற் கொள்க. ' சாரா ' என்னும் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ' புன்கேண்மை ' என்னும் பெயரைத் தழுவிற்று.' சிறியவர் ' இடைப்பிறிதுவரல். சிறப்பும்மை தொக்கது.
கலைஞர் உரை:
கீழ்மக்களின் நட்பு, பாதுகாப்பாக அமையாத தீயதன்மை கொண்டது என்பதனால், அவர்களுடன் நட்பு ஏற்படுவதைவிட, ஏற்படாமல் இருப்பதே நலம்.
சாலமன் பாப்பையா உரை:
நாம் பல வகையில் உதவி செய்தாலும் நமக்குப் பாதுகாப்பாக இராத அற்பர்களின் நட்பு, இருப்பதிலும் இல்லாதிருப்பதே நல்லது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
பாதுகாப்புக்குத் துணை வருவதாக வாக்குறுதி செய்திருந்தும் வராமல் இருந்துவிட்ட இழிகுணத்தாரின் அற்ப சகவாசத்தை அடைவதைவிட அடையாமல் இருப்பதே நல்லது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
நன்மை நிற்குமாறு செய்து வைத்தாலும், பாதுகாப்பு ஆகாத கீழ்மையானவர்களின் தீய நட்பானது உண்டாவதைவிட உண்டாகாமல் இருப்பதே நல்லதாகும்.
தமிழ்க்குழவி உரை:
துன்பம் நேர்கின்ற போது துணை நின்று பாதுகாப்பளிக்காத புன்மதியாளர்தம் நட்பைப் பெறுவதை விட பெறாமலிருப்பதே நன்று.
Translation
'Tis better not to gain than gain the friendship profitless Of men of little minds, who succour fails when dangers press.
Explanation
It is far better to avoid that to contract the evil friendship of the base who cannot protect (their friends) even when appointed to do so.
Transliteration
Seydhemanj Chaaraach Chiriyavar Punkenmai Eydhalin Eydhaamai Nandru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 815