|
தமக்கு பயன் உள்ள போது நட்பு செய்து பயன் இல்லாத போது நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன பயன், இழந்தாலும் என்ன பயன்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பு இலார் கேண்மை - தமக்குப் பயனுள்வழி நட்புச் செய்து அஃது இல்வழி ஒழியும் ஒப்பிலாரது நட்பினை; பெறினும் இழப்பினும் என் - பெற்றால் ஆக்கம் யாது? இழந்தால் கேடு யாது? (தமக்கு உற்றன பார்ப்பார் பிறரோடு பொருத்தமிலராகலின், அவரை 'ஒப்பிலார்' என்றார். அவர் மாட்டு நொதுமல் தன்மையே அமையும் என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
செல்வம் மிக்க காலத்து நட்புக் கொண்டு அஃது அற்ற காலத்து நீங்குகின்ற நிகரில்லாதார் நட்பைப் பெற்றதனால் வரும் நன்மை யாது? இழந்ததனால் வரும் தீமை யாது?. மக்களுள் இவரோடு ஒத்த இழிவுடையார் இன்மையான் ஒப்பிலார் என்றார். இது காலபுருடர் நட்புத் தீதென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
உறின் நட்டு அறின் ஒருவும் - தமக்கொரு பயனுள்ள விடத்து நட்புச்செய்து அஃதில்லாத விடத்து நீங்கிவிடும்; ஒப்புஇலார் கேண்மை-உள்ளத்தாற் பொருந்தாதவரது நட்பை; பெறினும் இழப்பினும் என்-பெற்றாலும் பெற்றபின் இழந்தாலும் இரண்டிற்கும் என்ன வேறுபாடுண்டு ? ஒன்றுமில்லை. தந்நலமே கருதுபவர் உள்ளத்தாற் பொருந்தாராதலின் ஒப்பிலார் என்றும், அவர் நட்பு இருப்பின் ஆக்கமும் இல்லாவிடின் கேடும் இன்மையால் ' பெறினும் இழப்பினுமென் ' என்றும், கூறினார். ஒத்தல் உள்ளம் ஒன்றுதல். ' ஒரூஉம் ' இன்னிசையளபெடை
|
|
கலைஞர் உரை:
|
|
தமக்குப் பயன்கிடைக்கும்போது நண்பராக இருந்துவிட்டு பயனில்லாதபோது பிரிந்து விடுகின்றவர்களின் நட்பு, இருந்தால் என்ன? இழந்தால்தான் என்ன?.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தமக்குப் பயனிருந்தால் நட்புக் கொண்டும், பயன் இல்லை என்றால் நட்பை விலக்கியும் வாழ்வதில் தமக்கு இணை இல்லாதவராய் இருப்பாரின் நட்பைப் பெற்றென்ன இழந்தென்ன?.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(பண்பில்லாதவர் இலக்கணம் இது:) ஒரு நன்மை வேண்டியபோது நட்புக் கொண்டாட வந்து அது தீர்ந்தவுடன் விட்டுப் போய்விடுகிற பொருந்தாதவர்களுடைய நட்பை அடைந்தாலென்ன? இழந்தாலென்ன?
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தமக்குப் பயன் உள்ளவரைக்கும் நட்பினைச் செய்து பயனில்லாதபோது நீங்கிவிடும் தீயவர்களின் நட்பினைப் பெற்றிருந்தால்தான் என்ன பயன்? இழந்தால் தான் என்ன பயன்?
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பயன்படுமாயின் நட்பு பாராட்டியும் பயன் இல்லாக்கால் தவிர்த்து விடுவதுமான தகுதியில்லாதவர் நட்பைப் பெற்றாலென்ன, இழந்தாலென்ன?
|
|
Translation
|
|
What though you gain or lose friendship of men of alien heart,
Who when you thrive are friends, and when you fail depart?.
|
|
Explanation
|
|
Of what avail is it to get or lose the friendship of those who love when there is gain and leave when there is none ? .
|
|
Transliteration
|
|
Urinnattu Arinoruum Oppilaar Kenmai
Perinum Izhappinum En
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|