Thirukural

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவதுகொள்வாரும் கள்வரும் நேர்.

கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலை மகளிரும், கள்வரும் ஒரு நிகரானவர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
உறுவது சீர் தூக்கும் நட்பும் - நட்பு அளவு பாராது அதனால் வரும் பயனளவு பார்க்கும் நட்டாரும்; பெறுவது கொள்வாரும் - கொடுப்பாரைக் கொள்ளாது விலையைக் கொள்ளும் பொதுமகளிரும்; கள்வரும் - பிறர்கேடு நோக்காது அவர் சோர்வு நோக்கும் கள்வரும்; நேர் - தம்முள் ஒப்பர்.(நட்பு - ஆகுபெயர். பொருளையே குறித்து வஞ்சித்து ஒழுகலின் கணிகையர் கள்வர் என்றிவரோடு ஒப்பர் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் தமககு உறுவது பார்ப்பார் நட்பின் தீமை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
நட்டோர்க்கும் தமக்கும் வரும் நன்மை தீமைகளை யொக்கப் பார்த்துத் தமக்கு நன்மையாகுமதனைச் சீர்தூக்கும் நட்டோரும், பெற்றது கொள்ளும் கணிகையரும், கள்வருமென்று கூறப்பட்டவர் தம்முள் ஒப்பார்.
தேவநேயப் பாவாணர் உரை:
உறுவது சீர்தூக்கும் நட்பும் - நட்கப்படுவாரின் நலத்தையும் அருமையையும் நோக்காது அவரால் தமக்கு வரும் பயனை மட்டும் அளந்து பார்க்கும் தந்நல நண்பரும்; பெறுவது கொள்வாரும் - கொடுப்பவரை உள்ளத்திற் கொள்ளாது அவர் கொடுக்கும் பொருளை மட்டும் மகிழ்ந்து ஏற்றுக்கொள்ளும் விலைமகரிரும்; கள்வரும் - பிறர்கேட்டையும் அவர் படுந்துன்பத்தையும் நோக்காது தமக்குக் கிடைக்கும் பொருளை மட்டும் நோக்கிக் களவு செய்வாரும்; நேர் - தம்முள் ஒத்தவராவர். தந்நலமே கருதிப் பிறர்பொருளை வஞ்சித்துப் பெறுதலில் மூவரும் ஒத்தலின் ' நேர் ' என்றார். ' நட்பு' ஆகு பொருளி.
கலைஞர் உரை:
பயனை எண்ணிப்பார்த்து அதற்காகவே நட்புக் கொள்பவரும், விலைமகளிரும், கள்வரும் ஆகிய இந்த மூவரும் ஒரே மாதிரியானவர்களே ஆவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
இவரிடம் நட்புக் கொள்வதால் தமக்கு என்ன கிடைக்கும் என்று எண்ணிப் பார்ப்பவரின் நட்பும், தமக்குத் தரும் கூலியை ஏற்றுக் கொள்ளும் பாலியல் தொழிலாளரும் திருடர்களும் ஒருவருக்கொருவர் சமமானவர்களே.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஏனெனில்) இலாபத்தைக் கருதி நண்பர்களைப் போல் நடிக்கிறவர்கள் பணத்தைக் கருதிக் காதலிபோல் நடிக்கிற வேசிகளுக்கும், திருடுவதற்காக யோக்கியர்களைப் போல் காணப்படுகிற கள்வருக்கும் ஒப்பாவார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
நட்பினைக் கருதாமல் நட்பினால் வரும் பயனைக் கருதுவோரும், கொடுப்பாரைக் கருதாமல் பணத்தின் அளவைக் காணும் பொது மகளிரும், பிறர் கேடு நோக்காமல் அவரது சோர்வினைப் பார்க்கும் கள்வரும் ஒரே தன்மையராவர்.
தமிழ்க்குழவி உரை:
இவருடன் பழகினால் என்ன கிடைக்கும் என எதிர்பார்த்து கிடைப்பதைப் பெற்றுக் கொண்டு அகன்று விடும் நட்பினரும் கள்வரும் ஒப்பாவர்.
Translation
These are alike: the friends who ponder friendship's gain Those who accept whate'er you give, and all the plundering train.
Explanation
Friendship who calculate the profits (of their friendship), prostitutes who are bent on obtaining their gains, and thieves are (all) of the same character.
Transliteration
Uruvadhu Seerdhookkum Natpum Peruvadhu Kolvaarum Kalvarum Ner

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 813