|
அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பருகுவார் போலினும் பண்பு இலார் கேண்மை - காதல் மிகுதியால் பருகுவார் போன்றாராயினும் தீக்குணமுடையார் நட்பு; பெருகலின் குன்றல் இனிது - வளர்தலின் தேய்தல் நன்று. ('பருகு வன்ன அருகா நோக்கமொடு' (பொருநர்.78)என்றார் பிறரும். நற்குணமில்லார் எனவே, தீக்குணமுடையார் என்பது அருத்தாபத்தியான் வந்தது. பெருகினால் வரும் கேடு குன்றினால் வாராமையின், 'குன்றல் இனிது' என்றார். இதனால், தீ நட்பினது ஆகாமை பொதுவகையால் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையால் கூறுப.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
கண்ணினால் பருகுவாரைப் போலத் தமக்கு அன்புடையரா யிருப்பினும், குணமில்லாதார் நட்புப் பெருகுமதனினும் குறைதல் நன்று. இது குணமில்லாதார் நட்புத் தீதென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பருகுவார் போலினும் - காதல் மிகுதியால் விழுங்கி விடுவார்போல் தோன்றினும், பண்பு இலார் கேண்மை - நற்குணமில்லார் நட்பு; பெருகலின் குன்றல் இனிது - வளர்தலினுத் தேய்ந்து போதல் நல்லது. குன்றல் - வரவரச் சுருங்கி இறுதியிற் சிறிதும் இல்லாமற் போதல், தீயார் நட்பு வளர்தலும் தேய்தலும் போன்றதே யென்பது கருத்து. உம்மை உயர்வு சிறப்பு. பருகுவார் போலுதல் என்னும் திருக்குறள் வழக்காறு, பிற்காலத்துப் புலவரால் வழிவழி ஆளப்பட்டு வந்துள்ளது. "பருகுவன்ன காத லுள்ளமொடு" (அகம். 369) "பருகு வன்ன வேட்கை" (புறம். 207) , "பருகு வன்ன வருகா நோக்கமொடு" (பொருத. 77), பருகு வன்ன நோக்கமொடு (பெருங். 3.7: 80), பருகிய நோக்கெனும் (கம்ப. 1. 11: 37), பருகுவான் போல நோக்கும் (பாக. 4.3 : 35), "பருகுவான் போல நோக்கி" (கூர்ம. திருக்கல். 91).
|
|
கலைஞர் உரை:
|
|
நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு வெள்ளத்தில் நம்மை மூழ்கடிப்பதுபோல் தோன்றினாலும் அவர்களது நட்பை, மேலும் வளர்த்துக் கொள்ளாமல் குறைத்துக் கொள்வதே நல்லது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
உயிரால் உருகுவார்போல் நடிக்கும், உள்ளத்துள் நல்ல பண்பு இல்லாதவரின் நட்பு வளர்வதைவிடக் குறைவது நல்லது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
கள்ளைக் குடிப்பது போல் களிப்புண்டாக்கக் கூடியதாக இருக்குமானாலும் நல்ல குணம் இல்லாதவர்களுடைய உறவை வளர விடுவதைக் காட்டிலும் தளரவிடுவது நல்லது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அன்பு மிகுதியால் நீரைப் பருகுவது போலப் பழகினாலும் தீய குணமுடையவர்களின் நட்பு வளர்வதை. விடத் தேய்வதே நல்லதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அள்ளிப் பருகுவது போல அன்பு காட்டினும் பண்பு இல்லாதவருடைய நட்பு பெருகுவதை விடக் குன்றுவது நன்று.
|
|
Translation
|
|
Though evil men should all-absorbing friendship show,
Their love had better die away than grow.
|
|
Explanation
|
|
The decrease of friendship with those who look as if they would eat you up (through excess of love) while they are really destitute of goodness is far better than its increase.
|
|
Transliteration
|
|
Parukuvaar Polinum Panpilaar Kenmai
Perukalir Kundral Inidhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|