Thirukural

பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினாவினால் அது பழகியவர் உரிமைப் பற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பழைமை எனப்படுவது யாது எனின் - பழைமை என்று சொல்லப்படுவது யாது என்று வினவின்; கிழமையை யாதும் கீழ்ந்திடா நட்பு - அது பழைமையோர் உரிமையால் செய்வனவற்றைச் சிறிதும் சிதையாது அவற்றிற்கு உடம்படும் நட்பு. ('கிழமை' ஆகுபெயர். 'கெழுதகைமை' என வருவனவும் அது. உரிமையால் செய்வனவாவன, கருமமாயின செய்யுங்கால் கேளாது செய்தல், கெடும்வகை செய்தல், தமக்கு வேண்டியன தாமே கோடல், பணிவு அச்சங்கள் இன்மை என்றிவை முதலாயின. சிதைத்தல் - விலக்கல். இதனான், 'பழைமையாவது காலம்சென்றதன்று, இப்பெற்றித்தாய நட்பு' என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
பழைமையென்று சொல்லப்படுவது யாதெனின் அது யாதொன்றிலும் உரிமையை அறுத்தலில்லாத நட்பு. இது பழையவன் செய்த உரிமையைச் சிறிதுஞ் சிதையாது உடன்படுதல் நட்பாவதென்றது
தேவநேயப் பாவாணர் உரை:
பழைமை யெனப்படுவது யாது எனின்-பழைமையென்று சொல்லப்படுவது என்னது என்று வினவின்; கிழமையை யாதும் கீழ்ந்திடா நட்பு-அது பழைமையான நண்பர் தாம்விரும்பியவாறு செய்தற்குரிய உரிமையைச் சிறிதும் கெடுக்காத பொறைநட்பாம். உரிமையால் விரும்பியவாறு செய்வன: கீழ்வினைஞரா யிருந்து கருமஞ் செய்யுங்காற் கேளாது செய்தல், கேடாகச் செய்யினும் மனம் வருந்தாமை, தமக்கு வேண்டியவற்றைத் தாமே யெடுத்துக்கொள்ளுதல், பணிவும் அச்சமுமின்மை, வீட்டிற்குள் வந்து தாராளமாகப் பழகுதல் முதலியன. இத்தகைய வரம்பு கடந்த நடத்தையைப் பொறுத்துக் கொள்வதே பழமை என்றவாறு. "ஒருவர் பொறையிருவர் நட்பு." (நாலடி. 223) என்றதும் இது பற்றியே. 'பழைமை' ஆகுபெயர்.
கலைஞர் உரை:
பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்.
சாலமன் பாப்பையா உரை:
பழைமை என்று சொல்லப்படுவதன் பொருள் என்ன என்றால், நெடுங்கால நண்பர் நம்மீது உரிமை எடுத்துக் கொண்டு பிழைபட நடந்தாலும் அதைப் பொருட்படுத்தாத நட்பு எனலாம்
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
பழைய நண்பர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டு மென்றால், நீண்ட நாள் நட்பினால் உண்டான உரிமைகளைக் கெடுத்துவிடாமல் நடந்துகொள்ள வேண்டும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பழைமை என்று சொல்லப்படுவது யாது என்றால் பழைய நண்பர்கள் உரிமையால் செய்தவை களைச் சிறிதேனும் நீக்காமல் அப்படியே உடன்படும் நட்பாகும்.
தமிழ்க்குழவி உரை:
பழைமை என்று பாராட்டிப் பேசப்படுவது யாதெனில் நெடுங்காலமாகப் பழகிய நட்புரிமையைத் தாழ்வுறச் செய்யாமல் தாங்கி மகிழ்வதே ஆகும்.
Translation
Familiarity is friendship's silent pact, That puts restraint on no familiar act.
Explanation
Imtimate friendship is that which cannot in the least be injured by (things done through the) right (of longstanding intimacy).
Transliteration
Pazhaimai Enappatuvadhu Yaadhenin Yaadhum Kizhamaiyaik Keezhndhitaa Natpu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 801