|
கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை - ஒருவன் கெடுங்காலத்து அவனை விட்டு நீங்குவார் முன் அவனோடு செய்த நட்பு; அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும் - தன்னைக் கூற்று அடுங்காலத்து ஒருவன் நினைப்பினும், அந்நினைத்த உள்ளத்தைச் சுடும். (நினைத்த துணையானே இயைபில்லாத பிறனுக்கும் கூற்றினுங் கொடிதாம் எனக் கைவீடு எண்ணிச்செய்த நட்பின் கொடுமை கூறியவாறு. இனி, 'அவன் தானே ஆக்கிய கேடு தன்னை அடுங்காலை உள்ளினும், அக்கேட்டினும் சுடும்'. என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் ஆராய்ந்தால் நட்கப்படாதார் இவர் என்பது கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
கெடும்பொழுது கைவிடுவாரது நட்பைத் தன்னைப் பிறர் கொல்லுங் காலத்து நினைப்பினும் நினைத்த மனத்தினை அந்நட்புச் சுடும்: அவர் கொல்லுமதனினும். இது கேட்டிற்கு உதவாதார் நட்பைத் தவிர்க வென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கெடும் காலைக் கைவிடுவார் கேண்மை-ஒருவனுக்குக் கேடு நேர்ந்த காலத்து அவனை விட்டு நீங்குவார் முன்பு அவனோடு செய்த பொய்ந்நட்பு; அடும் காலை உள்ளினும் உள்ளம் சுடும்-அவன் தன்னைக்கூற்றுவன் கொல்லுங் காலத்து நினைப்பினும் அவன் உள்ளத்தைத் தீப்போற் சுடும். கைவிட்டார் என்னாது 'கைவிடுவார்' என்றே பொதுப்படவும் பன்மையிலும் கூறியிருத்தலால், அடுங்காலையுள்ளுதலைக் கைவிடப்பட்டவன் செயலாகக் கொண்டார் பரிமேலழகர். இது "ஒருவ னினைப்பினும்" என்னும் அவர் உரையாலும், "நினைத்த துணையானே இயைபில்லாத பிறனுக்குங் கூற்றினுங் கொடிதாமெனக் கைவீடெண்ணிச் செய்த நட்பின் கொடுமை கூறியவாறு." என்னும் அவர் சிறப்புரையாலும் அறியப்படும் சொல்லமைதிக்குப் பொருத்தமானதும், கைவிடுவார் கொடுமை மிகுதியை எடுத்துக் காட்டுவதுமான இவ்வுரை, போற்றத்தக்கதே ஆயினும், "கைவிடுவார் கேண்மை" என்பது கைவிடுதலை வழக்கமாகக்கொண்ட பலரின் நட்பைக் குறிக்குமாயின் அடுங்காலையுள்ளுதலைக் கைவிடப்பட்டவன் செயலாகக் கொள்ளுதற்கும் ஏற்குமாம். இம்மூன்று குறளாலும் நட்கப்படத் தகாத இருவகையார் யார் என்பது கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
ஒருவர் கொலைக்கு ஆளாகும் போது கூட, தனக்குக் கேடு வந்த நேரம் கைவிட்டு ஒதுங்கி ஓடிவிட்ட நண்பர்களை நினைத்து விட்டால் அந்த நினைப்பு அவரது நெஞ்சத்தைச் சுட்டுப் பொசுக்கும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
கெடும்போது நம்மைக் கைவிட்டவரின் நட்பை நாம் சாகின்ற போது நினைத்தாலும் நம் நெஞ்சம் சுடும்
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஏனென்றால்) துன்பக் காலத்தில் கைவிட்டவர்களுடைய உறவு அழிவையே உண்டாக்கும். அவர்களைப் பற்றிக் குளிர்ச்சி யான காலை நேரத்தில் நினைத்தாலும் மனம் கொதிப்படையும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒருவன் கெட்டுப் போகும் காலத்தில் அவனை விட்டு நீங்குபவர்களிடம் செய்துகொண்ட நட்பினை. தன்னிடம் கூற்றுவன் வருகின்ற காலத்தில் நினைத்தாலும் அந்த நினைப்பு உள்ளத்தினைச் சுடும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
துன்பம் வந்துற்ற போது தொடர்பினைத் தவிர்த்து விடுவாரின் நட்பை, உயிர் போகும் காலை நினைத்தால் கூட உள்ளம் சுடும்.
|
|
Translation
|
|
Of friends deserting us on ruin's brink,
'Tis torture e'en in life's last hour to think.
|
|
Explanation
|
|
The very thought of the friendship of those who have deserted one at the approach of adversity will burn one's mind at the time of death.
|
|
Transliteration
|
|
Ketungaalaik Kaivituvaar Kenmai Atungaalai
Ullinum Ullanj Chutum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|