Thirukural

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்கஅல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.

ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்க வேண்டும், அதுபோல் துன்பம் வந்த போது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
உள்ளம் சிறுகுவ உள்ளற்க - தம் ஊக்கம் சுருங்குவதற்குக் காரணமாய வினைகளைச் செய்ய நினையாதொழிக; அல்லற்கண் ஆற்று அறுப்பார் நட்புக் கொள்ளற்க - அதுபோலத் தமக்கு ஒரு துன்பம் வந்துழிக் கைவிடுவார் நட்பினைக் கொள்ளாதொழிக. (உள்ளம் சிறுகுவ ஆவன, தம்மின் வலியாரோடு தொடங்கியனவும் பயனில்லனவும் ஆம். 'ஆற்று' என்பது முதனிலைத் தொழிற் பெயர். முன்னெல்லாம் வலியராவார் போன்று ஒழிதலின், 'ஆற்று அறுப்பார்' என்றார். எடுத்துக்காட்டு உவமை. கொள்ளின் அழிந்தேவிடும் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
தான் சிறுகுமவற்றை உள்ளத்தால் நினையாதொழிக; அதுபோல, அல்லல் வந்தவிடத்து வலியாகாதாரது நட்பினைக் கொள்ளாதொழிக. இது தீக்குணத்தார் நட்பைத் தவிர்க வென்றது
தேவநேயப் பாவாணர் உரை:
உள்ளம் சிறுகுவ உள்ளற்க-தம் ஊக்கங் குறைதற்குக் கரணியமான வினைகளைச் செய்யக் கருதா திருக்க; அல்லற்கண் ஆற்று அறுப்பார் நட்புக் கொள்ளற்க-துன்பக் காலத்திற் கைவிடுவார் நட்பைக் கொள்ளாதிருக்க. ஊக்கந் தளர்தற்குக் கரணியமாவன, தம் ஆற்றலுக்கு மிஞ்சிய வினைகளை மேற்கொள்ளுதலும் பயனில செய்தலுமாம். அவற்றை அறவே விடவேண்டுமென்பார் கருதலுஞ் செய்யாதிருக்க என்றார். 'ஆற்று' ஆற்றல்; முதனிலைத் தொழிலாகுபெயர். ஆற்றல் வலிமை ஆற்றறுத்தல்-வலியறுத்தல், அஃதாவது கைவிடுதல் . துன்பக் காலத்திற் கைவிடுவார் தொடர்புகொள்வதும் ஊக்கங் குறைக்கும் செயலாதலால், இங்கு உவமைக் கருத்துக்கொள்ளத் தேவையில்லை
கலைஞர் உரை:
ஊக்கத்தைச் சிதைக்கக்கூடிய செயல்களையும், துன்பம் வரும்போது விலகிவிடக்கூடிய நண்பர்களையும் நினைத்துப் பார்ககாமலே இருந்து விட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
உற்சாகம் குறைவதற்கான செயல்களை எண்ண வேண்டா; நம் துன்பக் காலத்தில் நம்மைக் கைவிட்டு விடுபவரின் நட்பைக் கொள்ள வேண்டா
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அப்படி நீக்கப்பட்டவர்கள் அவர்களாகவே மறுபடியும் வந்தாலும் நண்பராக நம்பிவிடக்கூடாது.) மனத்தைக் குறுக்கக் கூடிய அற்பக் காரியங்களை நினைக்கவும் கூடாது. அதைப்போலத் துன்பக் காலத்தில் உதவாது போனவர்களுடைய நட்பை ஏற்றுக் கொள்ளக் கூடாது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தன்னுடைய ஊக்கம் சுருங்குவ தற்குக் காரண மான செயல்களைச் செய்ய நினையாதிருத்தல் வேண்டும். அதுபோல, தனக்கு ஒரு துன்பம் வந்தபோது கைவிடுவார் நட்பினைக் கொள்ளாதிருத்தல் வேண்டும்.
தமிழ்க்குழவி உரை:
உறுதிப்பாட்டினைக் குறைக்கும் எண்ணங்கள் எழாதிருத்தல் வேண்டும். அது போலவே துன்ப வேளைகளில் விட்டுச் செல்பவர்களின் நட்பையும் பற்றி நிற்கக் கூடாது.
Translation
Think not the thoughts that dwarf the soul; nor take For friends the men who friends in time of grief forsake.
Explanation
Do not think of things that discourage your mind, nor contract friendship with those who would forsake you in adversity.
Transliteration
Ullarka Ullam Sirukuva Kollarka Allarkan Aatraruppaar Natpu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 798