Thirukural

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்அல்லல் உழப்பதாம் நட்பு.

அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவுவந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அழிவினவை நீக்கி ஆறு உய்த்து - கேட்டினைத்தரும் தீநெறிகளைச் செல்லுங்கால் விலக்கி, ஏனை நன்னெறிகளைச் செல்லாக்காற் செலுத்தி; அழிவின்கண் அல்லல் உழப்பது நட்பாம் - தெய்வத்தால் கேடு வந்துழி அது விலக்கப்படாமையின் அத்துன்பத்தை உடன் அனுபவிப்பதே ஒருவனுக்கு நட்பாவது. ('ஆறு' என வருகின்றமையின், 'அழிவினைத் தருமவை' என்றொழிந்தார். 'தெருண்ட அறிவினவர'(நாலடி.301) என்புழிப்போல இன்சாரியை நிற்க இரண்டனுருபு தொக்கது. இனி, 'நவை' என்று பாடம் ஓதி, அதற்குப் போர் அழிவினும் செல்வ அழிவினும் வந்த துன்பங்கள் என்றும், 'அழிவின்கண்' என்பதற்கு யாக்கை அழிவின்கண் என்றும் உரைப்பாரும் உளர்.)
மணக்குடவர் உரை:
நட்டார்க்கு அழிவு வந்தவிடத்து அவர் துன்பத்தை நீக்கி நல்ல நெறியின்கண் செலுத்தித் தாங்கித் தன்னால் செயலற்ற விடத்து அவரொடு ஒக்கத் தானும் துன்பம் உழப்பது நட்பு
தேவநேயப் பாவாணர் உரை:
அழிவினவை நீக்கி-நண்பன் கேடுதரும் தீயவழிகளில் ஒழுகுங்கால் அவற்றினின்று விலக்கி; ஆறு உய்த்து-நல்வழிகளில் ஒழுகாக்கால் அவற்றிற் செலுத்தி; அழிவின்கண் அல்லது உழப்பது-தெய்வத்தாற் கேடு வந்தவிடத்து அதை நீக்க முடியாமையின், அத்துன்பத்தைத் தானும் உடன் நுகர்ந்து வருந்துவதே; நட்பு-ஒருவனுக்கு நட்பாவது. ஆறு என்னும் பொதுப்பெயர் நெறி, வழி என்பனபோல நல்லாற்றைக் குறித்தது. 'ஆறுய்த்து' என்றதனால், 'அழிவினவை நீக்கி' என்பதில் 'அழிவினவை' தீயநெறிகளைக் குறித்தமை அறியப்படும். "இனி, நவையென்று பாடமோதி, அதற்குப் போரழிவினுஞ் செல்வ வழிவினும் வந்த துன்பங்களென்றும், 'அழிவின்க'ணென்பதற்கு யாக்கையழிவின்கணென்றும் உரைப்பாருமுளர்." என்று பரிமேலழகர் கூறியுள்ளது நன்மறுப்பாகும்.
கலைஞர் உரை:
நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத் தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும்
சாலமன் பாப்பையா உரை:
அழிவு தரும் வழிகளில் நண்பன் சென்றால் தடுத்து, நல்ல வழியில் அவனைச் செலுத்தி அவனுக்குக் கேடு வரும் என்றால் அதை அவனுடன் பகிர்வது நட்பு
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அப்படி உள்ளமும் உள்ளமும் ஒத்த நட்பின் தன்மை என்னவென்றால்) நண்பன் தீமை தரக்கூடிய வழிகளில் காரியம் செய்யும்போது (அவற்றினின்றும் அவனை விலகச் செய்து) நல்ல மார்க்கத்தில் திருப்புவதும், அவனுக்கு ஒரு துன்பம் வந்துவிட்டால் உடனிருந்து அத்துன்பத்தில் பங்கு கொள்வதுந்தான் நட்பு.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
கெடுதியினைத் தரும் தீய வழிகளில் செல்லும் போது நண்பனை அவ்வாறு செல்லாமல் விலக்கி நல்லவழி களில் செலுத்துவதும் கெடுதல் வந்தபோது தானும் உடனிருந்து அனுபவிப்பதுமே சிறந்த நட்பாகும்.
தமிழ்க்குழவி உரை:
அழிவைத் தருகின்ற தீய பழக்கங்களிலுருந்து விடுவித்து நல்வழிகாட்டுவதும் அதையும் மீறி துன்புறுங்கால் துணைநிற்பதும் தான் நல்லநட்பு.
Translation
Friendship from ruin saves, in way of virtue keeps; In troublous time, it weeps with him who weeps.
Explanation
(True) friendship turns aside from evil (ways) makes (him) walk in the (good) way, and, in case of loss if shares his sorrow (with him).
Transliteration
Azhivi Navaineekki Aaruyththu Azhivinkan Allal Uzhappadhaam Natpu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 787