|
தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
உணர்வது உடையார்முன் சொல்லல் - பிறர் உணர்த்தலின்றிப் பொருள்களைத் தாமே உணரவல்ல அறிவினை உடையவர் அவைக்கண் கற்றார் ஒன்றனைச் சொல்லுதல்; வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிந்தற்று - தானே வளர்வதொரு பயிர் நின்ற பாத்திக்கண் நீரினைச் சொரிந்தாற்போலும். (தானேயும் வளர்தற்குரிய கல்வி மிக வளரும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும், ஒத்தார் அவைக்கண் எவ்வழியும் சொல்லுக என்பது கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
யாதாயினும் ஒன்றைச் சொல்லுங்கால் அதனைத் தெரிந்தறியும் அறிவுடையார்முன்பு சொல்லுவது, வளர்வதொன்று நின்ற பாத்தியின்கண்ணே நீர் சொரிந்தாற்போலும்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
உணர்வது உடையார்முன் சொல்லல் -பிறர் உணர்த்த வேண்டாது தாமே பொருள்களை யுணரவல்ல அறிவுடையாரவைக்கண் கற்றார் ஒன்றைச் சொல்லுதல்; வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிந்த அற்று -தானாக வளரும் பயிர் நின்ற பாத்திக்குள் நீரை வார்த்தாற் போலும். தானே வளரும் அறிவு மிக விரைந்து வளரும் என்பதாம். இவ்விரு குறளாலும், ஒத்தாரவைக்கண் கற்றோர் தமக்குரிய இலக்கியநடையிற் பேசுக என்பது கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், வளரக்கூடிய பயிர் உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளைக்கும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பிறர் சொல்லாமலேயே தாமே பலவற்றையும் அறிந்து கொள்ளும் அறிவுத் திறம் உடையவர் கூடியுள்ள அவையில் பேசுவது வளரும் பயிர் நிற்கும் பாத்தியில் நீரினைப் பாய்ச்சியது போலாம்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(எப்படி யென்றால்) உணர்ந்து அனுபவிக்கும் தன்மை உள்ளவர்களுக்கு முன்னால் பேசிப் பழகுவது, வளரும் பயிருள்ள பாத்திக்குள் நீர் பாய்ச்சுவதைப் போன்றது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பிறர் உணர்த்தாமல் தாமே உணரவல்ல அறிவினையுடையவர்கள் இருக்கும் அவையில் ஒன்றனைச்சொல்லுதல் தானே வளர்வதொரு பயிர் நின்ற பாத்தின் கண் நீரினைச் சொரிந்தது போன்றதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒத்த உணர்வுகளும், ஒழுக்கமும் உடையார் அவையில் பேசுவது, நன்றாக வளரும் பயிர்களைக் கொண்ட பாத்திக்கு நீர் பாய்ச்சுதலை ஒக்கும்.
|
|
Translation
|
|
To speak where understanding hearers you obtain,
Is sprinkling water on the fields of growing grain!.
|
|
Explanation
|
|
Lecturing to those who have the ability to understand (for themselves) is like watering a bed of plants that are growing (of themselves).
|
|
Transliteration
|
|
Unarva Thutaiyaarmun Sollal Valarvadhan
Paaththiyul Neersorin Thatru
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|