|
(அரசரைச் சார்ந்தவர்) தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால் அரியத் தவறுகள் நேராமல் காத்துக்கொள்ள வேண்டும், ஐயுற்றபின் அரசரைத் தெளிவித்தல் எவர்க்கும் முடியாது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
போற்றின் அரியவை போற்றல் - அமைச்சர் தம்மைக் காக்கக் கருதின் அரிய பிழைகள் தங்கண் வாராமல் காக்க; கடுத்த பின் தேற்றுதல் யார்க்கும் அரிது - அவற்றை வந்தனவாகக் கேட்டு அவ்வரசர் ஐயுற்றால் அவரைப் பின் தெளிவித்தல் யாவர்க்கும் அரிது ஆகலான். (அரிய பிழைகளாவன: அவரால் பொறுத்தற்கு அரிய அறைபோதல், உரிமையொடு மருவல், அரும்பொருள் வௌவல் என்றிவை முதலாயின. அவற்றைக் காத்தலாவது, ஒருவன் சொல்லியக்கால் தகுமோ என்று ஐயுறாது தகாது என்றே அவர் துணிய ஒழுகல். ஒருவாற்றான் தெளிவித்தாலும் கடன்கொண்டான் தோன்றப் பொருள் தோன்றுமாறுபோலக் கண்டுழியெல்லாம் அவை நினைக்கப்படுதலின் யார்க்கும் அரிதென்றார். இவை மூன்று பாட்டானும் அது பொதுவகையால் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
காப்பின், காத்தற்கு அரியனவற்றைக் காப்பாற்றுக: ஐயப்பட்ட பின்பு தௌ¤வித்தல் யாவர்க்கும் அரிது. இஃது அடுத்தொன்று சொல்லாம லொழுகவேண்டும்மென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
போற்றின்அரியவை போற்றல்-அமைச்சர் தம்மைக் காக்க விரும்பின் கடும்பிழைகள் தம்மேல் வராமற் காத்துக் கொள்க; கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது-அவற்றை நிகழ்ந்தனவாகக் கேள்விப்பட்டு அரசர் ஐயுற்றபின்அவரைத் தெளிவித்தால் எத்துணைச் சிறந்தவர்க்கும் அரிதாம். கடும்பிழைகள் பகைவராற் கீழறுக்கப்படுதல், அரசர்க்கேயுரிய உரிமை மகளிரொடு பழகுதல், அரசன் உத்தரவின்றி அவனறைக்குட் புகுதல், அரும்பொருள் கவர்தல் முதலியன. கீழறுக்கப் படுதலாவது பகைவரிடம் பொருள் பெற்றுக்கொண்டு அவருக்குத் துணையாயிருக்க உடன்படுதல் இது அறைபோதல் எனவும்படும். இத்தகைய குற்றங்கள் வராமற் காத்தலாவது, யாரேனும் இவை நிகழ்ந்ததாக அரசனிடம் சொல்லினும், அதை கடுகளவும் நம்பாதவாறு தூய்மையாக ஒழுகுதல். ஒருமுறை ஐயுற்றபின், அதை ஒருவகையால் தெளிவித்தாலும், அவர் உள்ளத்தில் அது என்றும் நிலைத்திருக்குமாதலின்,'யார்க்கு மரிது'என்றார். உம்மை உயர்வுசிறப்பு.
|
|
கலைஞர் உரை:
|
|
தமக்கு மேலேயுள்ளவர்களிடத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்புகிறவர்கள். பொறுத்துக் கொள்ள முடியாத குற்றங்களைச் செய்யாமல் இருக்கவேண்டும். அப்படி செய்துவிட்டால் அதன் பிறகு தம் மீது ஏற்பட்ட சந்தேகத்தை நீக்குவது எளிதான காரியமல்ல.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஆட்சியாளருடன் பழகுவோர் தம்மைக் காக்கக் கருதினால் மோசமான பிழைகள் தம் பங்கில் நேர்ந்து விடாமல் காக்க; பிழைகள் நேர்ந்துவிட்டதாக ஆட்சியாளர் சந்தேகப் பட்டுவிட்டால் அவரைத் தெளிவிப்பது எவர்க்கும் கடினம்
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(பல மனிதர்களுக்குச் சிற்சில கெட்ட பழக்கங்கள் உண்டு. அவற்றை அடக்குவது கடினமாக இருக்கும். ஆயினும் அரசனுடன் இருக்கும்போது) அடக்கிக் கொள்ளக் கடினமான பழக்கங்களையும் அடக்கி எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும். இல்லாவிடில் அரசனுக்குக் கெட்ட அபிப்பிராயம் உண்டாகிவிடும். அதை மாற்ற யாராலும் முடியாது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அமைச்சர் தங்களைக் காத்துக் கொள்ள நினைத்தால் அரிய பிழைகள் தம்மிடம் வராமல் காத்தல் வேண்டும். அவை வந்ததாகக் கேட்டு அரசன் சந்தேகப் பட்டுவிட்டால் அவ்வரசரைப் பிறகு தெளிவுப் படுத்துதல் யாவர்க்கும் அரிய தாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
மன்னரோடு இருப்பவர்கள் செயல்பாடுகளில் தவறு நேர்ந்திடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தவறிழைப்பின் அதன் விளைவினின்று மீள்வது அரிது.
|
|
Translation
|
|
Who would walk warily, let him of greater faults beware;
To clear suspicions once aroused is an achievement rare.
|
|
Explanation
|
|
Ministers who would save themselves should avoid (the commission of) serious errors for if the king's suspicion is once roused, no one can remove it.
|
|
Transliteration
|
|
Potrin Ariyavai Potral Katuththapin
Thetrudhal Yaarkkum Aridhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|