|
அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
வேலாருள் வென்றி வினை உரைப்பான் பண்பு - வேலையுடைய வேற்றரசரிடைச் சென்று தன் அரசனுக்கு வென்றி தரும் வினையைச் சொல்லுவானுக்கு இலக்கணமாவது; நூலாருள் நூல் வல்லன் ஆகுதல் - நீதி நூலையுணர்ந்த அமைச்சரிடைத் தான் அந்நூலை வல்லனாதல். ('கோறல் மாலையர்' என்பது தோன்ற 'வேலார்' என்றும், தூது வினை இரண்டும் அடங்க 'வென்றி வினை' என்றும் கூறினார். வல்லனாதல்: உணர்வு மாத்திரமுடையராய அவர் முன் வகுக்கும் ஆற்றல் உடையனாதல்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
எல்லா நூல்களையும் கற்றார்முன்னர் அந்நூல்களைத் தானுஞ் சொல்ல வல்லவனாதல், வேலுடையார் முன்னின்று தன்னரசனுக்கு வெற்றியாகிய வினையைச் சொல்லுமவனது இயல்பாம்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
வேலாருள் வென்றிவினையுரைப்பான் பண்பு-வேற்படையுடைய வேற்றரசரிடஞ் சென்று தன் அரசனுக்கு வெற்றி தரும் வினையைச் சொல்வானுக்கு இலக்கணமாவது; நூலாருள் நூல்வல்லன் ஆகுதல்-அரசியல் நூலை அறிந்தவருள் தான் அந்நூலறிவிற் சிறந்தவனாயிருத்தலாம். கொல்லுந் திறத்தினர் என்பது தோன்ற 'வேலார்' என்றும், இருவகைத்தூது வினையும் அடங்க 'வென்றிவினை' என்றும், கூறினார். 'வல்லனாகுதல்' அந்நூற் செய்தியெல்லாவற்றையும் தெளிவாக அறிந்திருத்தலும், தவறாகச் சொன்னவிடத்து அதைத் திருத்துதலுமாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைத்திடும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயே வல்லவனாக இருத்தல் வேண்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அனைத்து அரசியல் அறத்தை, நீதி நூல்களை அறிந்தவர்களுக்குள்ளே அதிகம் அறிந்தவனாய் ஆவது, ஆயுதபலம் கொண்ட பகை அரசரிடையே, தன் நாட்டுக்கு நலம் தேடிச் செல்லும் தூதரின் பண்பாகும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
வேற்றரசரிடம் தூது சென்று அவர்களுடைய சபையில் விவாதிக்க நேர்ந்தால், அரசியல் நீதி நூல்களிலும் வல்லவனாகப் பேசக்கூடியவனே வெற்றிகரமான தூதனாவான்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
வேலினையுடைய வேற்றரசனிடம் சென்று தம் அரசனுக்கு வெற்றியைத் தரும் தொழில் சொல்வானுக்கு இலக்கணமாவது, நீதி நூல்களைக் கற்ற அமைச்சருக்குள் தான் அவற்றில் வல்லவனாதல்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
கற்றாருள் கற்றவராக விளங்குபவரே பகை நாட்டாரிடம் சென்று தன் நாட்டிற்கு வெற்றிதரும் வகையில் தூதுரைக்க முடியும்.
|
|
Translation
|
|
Mighty in lore amongst the learned must he be,
Midst jav'lin-bearing kings who speaks the words of victory.
|
|
Explanation
|
|
To be powerful in politics among those who are learned (in ethics) is the character of him who speaks to lance-bearing kings on matters of triumph (to his own sovereign).
|
|
Transliteration
|
|
Noolaarul Noolvallan Aakudhal Velaarul
Vendri Vinaiyuraippaan Panpu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|