|
அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அன்பு - தம் அரசன் மாட்டு அன்புடைமையும்; அறிவு - அவனுக்கு ஆவன அறியும் அறிவுடைமையும்; ஆராய்ந்த சொல் வன்மை - அவற்றை வேற்றரசரிடைச் சொல்லுங்கால் ஆராய்ந்து சொல்லுதல் வன்மையும் என; தூது உரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று - தூதுரைக்க உரியார்க்கு இன்றியமையாத குணங்கள் மூன்று. (ஆராய்தல்: அவற்றிற்கு உடம்படுஞ் சொற்களைத் தெரிதல். 'இன்றியமையாத மூன்று' எனவே அமைச்சர்க்குச் சொல்லிய பிற குணங்களும் வேண்டும் என்பது பெற்றாம். இவை இரண்டு பாட்டானும் இரு வகை
யார்க்கும் பொது இலக்கணம் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அன்புடைமையும், அறிவுடைமையும், தெரிந்த சொல்வன்மையுடைமையும், தூதுரைப்பாற்கு இன்றியமையாத மூன்று குணங்களாம்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அன்பு-தம் அரசனிடத்து அன்புடைமையும்; அறிவு-தம் வினைக்கு அறிய வேண்டியவற்றை அறிந்திருத்தலும்; ஆராய்ந்த சொல் வன்மை-செவிக்கும் உள்ளத்திற்கும் இனியனவும் பொருட் கொழுமையுள்ளனவும் தகுந்தனவுமான சொற்களை ஆராய்ந்தமைத்துக் கூறும் நாவன்மையும்; தூது உரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று-தூது சொல்வார்க்கு இன்றியமையாத மூன்று திறங்களாம். 'இன்றியமையாத முன்று, எனவே, முன்பு அமைச்சர்க்குக்கூறப் பட்ட பிறவிலக்கணங்களும் வேண்டு மென்பது பெறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
தூது செல்பவருக்குத் தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள் அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அன்பு நாட்டிற்கு நல்லது அறியும் அறிவு, அடுத்தவரிடம் பேசும்போது தேர்ந்து எண்ணிச் சொல்லும் சொல்லாற்றல் இவை மூன்றும் தூதர்க்கு இன்றியமையாதன.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
தூது செல்கிறவர்களுக்கு இருக்கவேண்டிய இன்றி யமையாத மூன்று தகுதிகள் என்னவெனில், தூது சொல்லப் போகிற காரியத்தில் ஆர்வம், அந்தக் காரியத்தை விவரமாக அறிந்திருப்பது, தூது சென்ற காரியத்தைச் சொல்லும்போது தேர்ந்தெடுத்த சொற்களைப் பேசும் நாவன்மை ஆகியவை.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
மன்னரிடம் நிறைந்த அன்புடைமையும், அறிவுடைமையும், ஆராய்ந்து சொல்லும் வன்மையும் எனத் தூதுரைப்பார்க்கு இன்றியமையாத குணங்கள் மூன்று.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அன்போடு அறிவும், எதையும் ஆராய்ந்து சொல்கின்ற ஆற்றலும் தூது செல்வார்க்கு வேண்டிய இன்றியமையாத பண்புகள்.
|
|
Translation
|
|
Love, knowledge, power of chosen words, three things,
Should he possess who speaks the words of kings.
|
|
Explanation
|
|
Love (to his sovereign), knowledge (of his affairs), and a discriminating power of speech (before other sovereigns) are the three sine qua non qualifications of an ambassador.
|
|
Transliteration
|
|
Anparivu Aaraaindha Solvanmai Thoodhuraippaarkku
Indri Yamaiyaadha Moondru
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|