|
இயற்கை அறிவு, விரும்பத்தக்கத் தோற்றம், ஆராய்ச்சி உடையக் கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அறிவு - இயற்கையாகிய அறிவும்; உரு - கண்டார் விரும்பும் தோற்றப்பொலிவும்; ஆராய்ந்த கல்வி - பலரோடு பலகாலும் ஆராயப்பட்ட கல்வியும் என; இம்மூன்றன் செறிவு உடையான் - நன்கு மதித்தற்கு ஏதுவாய இம்மூன்றனது கூட்டத்தை உடையான்; வினைக்குச் செல்க-வேற்று வேந்தரிடைத் தூது வினைக்குச் செல்க. (இம்மூன்றும் ஒருவன்பாற் கூடுதல் அரிது ஆகலின், 'செறிவுடையான்'என்றார். இவற்றான் நன்கு மதிப்புடையனாகவே, வினை இனிது முடியும் என்பது கருத்து.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அறிவும், வடிவும், தெரிந்த கல்வியுமாகிய இம் மூன்றினது அடக்கமுடையவன் வினைக்குச் செல்க. அறிவு- இயற்கையறிவு
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அறிவு-இயற்கையான அறிவும்; உரு-கண்டார் மதிக்குந் தோற்றப் பொலிவும்; ஆராய்ந்த கல்வி-ஆராய்ச்சியோடு கூடிய கல்வியும்; இம் மூன்றன் செறிவு உடையான்-ஆகிய இம் முன்றும் நிறைந்தவன்; வினைக்குச் செல்க-வேற்றரசரிடம் தூதனாகச் செல்க. இம் மூன்றும் நிறைந்தவன் செல்லின், தூதுவினை சிறப்பாக முடியுமென்பது கருத்து. பல நூல்களையும் அவற்றின் வேறுபட்டவுரைகளையுங் கற்று உலகியலொடு பொருந்தத் தானும் ஆராய்ந்ததை, 'ஆராய்ந்த கல்வி' என்றார்.
|
|
கலைஞர் உரை:
|
|
தூது உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும்
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
இயல்பான நல்லறிவு, காண்பவர் விரும்பும் தோற்றம், பலரோடும் பலகாலமும் ஆராய்ந்த கல்வி இம்மூன்றையும் நிறையப் பெற்றுச் சொல்ல வேண்டியதைத் தானே எண்ணிச் சொல்லும் திறம் படைத்தவன் தூதர் பணிக்குச் செல்க
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(குறைந்தபட்சமாக,) தூது செல்லவேண்டிய காரியத்தைப் பற்றிய அறிவு, யாவரும் மதிக்கத் தகுந்த கம்பீரமான உருவம், ஆராய்ச்சியுள்ள படிப்பு இந்த மூன்றும் யாரிடத்தில் நிறைந் திருக்குமோ அவனைத் தூதனாக அனுப்பவேண்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
இயற்கையான அறிவும், கண்டார் விரும்பும் தோற்றமும், பற்பல வகையில் ஆராய்ந்த கல்வியும் ஆகிய இம்மூன்றும் நிறைந்திருக்கப் பெற்றவனே வேற்றரசரிடம் தூது செல்லக் கடவன்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஆழ்ந்த அறிவு, அழகிய தோற்றம், ஆய்ந்துணரும் கல்வி இம்மூன்று தன்மைகளும் சிறப்பாக அமையப் பெற்றவரே தூதுரைக்கும் பணிக்கு ஏற்றவர்.
|
|
Translation
|
|
Sense, goodly grace, and knowledge exquisite.
Who hath these three for envoy's task is fit.
|
|
Explanation
|
|
He may go on a mission (to foreign rulers) who has combined in him all these three. viz., (natural) sense, an attractive bearing and well-tried learning.
|
|
Transliteration
|
|
Arivuru Vaaraaindha Kalviim Moondran
Serivutaiyaan Selka Vinaikku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|