Thirukural

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.

அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அன்பு உடைமை - தன் சுற்றத்தார்மாட்டு அன்புடையனாதலும்; ஆன்ற குடிப்பிறத்தல் - அமைச்சுப் பூணற்கு அமைந்த குடியின்கண் பிறத்தலும்; வேந்து அவாம் பண்பு உடைமை - அரசர் சாதி விரும்பும் பண்புடையன் ஆதலும்; தூது உரைப்பான் பண்பு - தூது வார்த்தை சொல்வானுக்கு இலக்கணம். (முன்னைய இரண்டனாலும், முறையே சுற்றத்தார்க்கும் தீங்கு வாராமல் தான் பேணியொழுகலும், தன் முன்னோர் தூதியல் கேட்டறிதலும் பெற்றாம், வேந்து அவாம் பண்பு உடைமை முன்னர் மன்னரைச் சோந்தொழுகற்கண் பெறப்படும். அதனால் வேற்றரசரும் அவன் வயத்தராதல் பெறுதும்.)
மணக்குடவர் உரை:
அரசன்மாட்டு அன்புடைமையும், அமைந்த குடியின்கண் பிறத்தலும், வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையும் தூதாகிச் சென்று சொல்லுமவனது இயல்பாம். வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையாவது அவன் விரும்புவனவற்றைத் தான் விரும்பாமை
தேவநேயப் பாவாணர் உரை:
அன்பு உடைமை-மக்களிடத்து அன்பாயிருத்தலும்; ஆன்ற குடிப்பிறத்தல்-ஆட்சித் தொழிற்கேனும் அமைச்சுத் தொழிற்கேனும் ஆசிரியத் தொழிற்கேனும் ஏற்ற வகுப்பிலும் குடும்பத்திலும் பிறந்திருத்தலும்; வேந்து அவாம் பண்பு உடைமை-அரசர் விரும்பத்தக்க சிறந்த தன்மைகளுடையனா யிருத்தலும்; தூது உரைப்பான் பண்பு-தூது சொல்வானுக்கு உரிய இலக்கணங்களாம். நாட்டிற்கு நன்மையை நாடவேண்டு மாதலின் 'அன்புடைமை' யென்றும், குலத்தொழிலறிவு கல்லாமற் பாதியமையுமாதலின் 'ஆன்ற குடிப்பிறத்தல்' என்றும், அரசருள்ளத்தைக் கவருந்தன்மை களுடையவன் கூறும் தூதை அவர் விரும்பிக் கேட்பராதலின் 'வேந்தவாம் பண்புடைமை' என்றும், கூறினார். குடியென்றது இங்குத் தொல்வரவான அரசர் குடும்பத்தையும் சேக்கிழார் குடிபோலும் வேளாண் சரவடியையுமாம். அவாவும் என்பது அவாம் எனக்குறைந்து நின்றது. இக்குறளால் இருவகைத் தூதர்க்கும் பொது விலக்கணம் கூறப்பட்டது.
கலைஞர் உரை:
அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும், அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய தகுதிகளாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நாட்டு மக்கள், அரசு, உறவு இவற்றின் மீது அன்பும், நற்குணம் நிறைந்த குடிப்பிறப்பும், அரசு விரும்பும் பண்பும் கொண்டிருப்பவரே தூதர்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
தூது சென்று பேசக்கூடியவனுடைய தகுதிகள் எவை யென்றால், தூது அனுப்புகிறவர்களிடத்தில் அன்புடையவனாகவும் நல்ல குடும்பத்தில் பிறந்தவனாகவும், அரசர்கள் விரும்பும்படி நடந்து கொள்ளக்கூடியவனாகவும் இருப்பதே.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
எல்லோரிடத்திலும் அன்புடையவராக இருத்தலும், உயர்ந்த குடும்பத்தில் பிறந்திருத்தலும், வேந்தன் விரும்புகின்ற பண்புடையவராக இருத்தலும் ஆகிய இத்தன்மைகள் தூது செல்வோர்க்குரிய இலக்கணமாகும்.
தமிழ்க்குழவி உரை:
அன்பு உடைமை, சிறந்த குடிப்பிறப்பு, மன்னர் விரும்பும் பண்பு நலன் இவை தூது உரைப்பார்க்கு வேண்டிய தகுதிகள்
Translation
Benevolence high birth, the courtesy kings love:- These qualities the envoy of a king approve.
Explanation
The qualification of an ambassador are affection (for his relations) a fitting birth, and the possession of attributes pleasing to royalty.
Transliteration
Anputaimai Aandra Kutippiraththal Vendhavaam Panputaimai Thoodhuraippaan Panpu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 681