Thirukural

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றிஇன்பம் பயக்கும் வினை.

(முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்த போதிலும் துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
துன்பம் உறவரினும் - முதற்கண் மெய்ம்முயற்சியால் தமக்குத் துன்பம் மிக வருமாயினும்; இன்பம் பயக்கும் வினை துணிவு ஆற்றிச் செய்க - அது நோக்கித் தளராது முடிவின்கண் இன்பம் பயக்கும் வினையைத் திட்பமுடையராய்ச் செய்க.(துணிவு - கலங்காமை. அஃதுடையார்க்கு அல்லது கணிகமாய முயற்சித்துன்பம் நோக்காது நிலையுதலுடைய பரிணாமஇன்பத்தை நோக்கிச் செய்தல் கூடாமையின், 'துணிவாற்றிச்செய்க' என்றார். இவை இரண்டு பாட்டானும் அவர் வினைசெய்யுமாறு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
முற்பாடு துன்பம் உறவரினும் துணிந்து செய்க, பிற்பாடு இன்பம் பயக்கும் வினையை.
தேவநேயப் பாவாணர் உரை:
துன்பம் உறவரினும்-வினைசெய்யுங்கால் தமக்குத் துன்பம் மிகுதியாக வருமாயினும்; இன்பம் பயக்கும் வினை துணிவு ஆற்றிச் செய்க-அது பற்றித் தளராமல் முடிவில் இன்பந்தரும் வினையை மனத்திண்மையுடன் செய்க. துன்பம் வருங்காலம் குறிக்கப்படாமையின், வினையின் முதலிடை கடையில் மட்டுமன்றி முழுமையுந் துன்பம் வரினும் பொறுக்க வேண்டு மென்பதாம். பிள்ளை பெறுபவளின் துன்பம் பிள்ளை பெற்றபின் இன்பமாக மாறுவது போல், முயற்சித், துன்பமும் வெற்றிப்பேற்றால் இன்பமாக மாறு மென்பார், 'இன்பம் பயக்கும் வினை' என்றார். 'உற' உரிச்சொல்.
கலைஞர் உரை:
இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில் இன்பம் தரும் அச்செயலை மனம் தளராமல் செய்க.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அதனால்) துன்பப்பட நேரிட்டாலும் பின்வாங்காமல் உலகத்துக்கு இன்பம் உண்டாக்கக்கூடிய நல்ல காரியங்களை வைராக்கியத்தோடு செய்யவேண்டும். அதுதான் வினைத்திட்பம்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
முதற்கண் மெய்ம்முயற்சியால் தனக்கு மிகுந்த- துன்பம் வந்தாலும் அது கண்டு தளராமல் முடிவில் இன்பம் பயக்கும் தொழிலினைத் திட்பமுடையவராகச் செய்தல் வேண்டும்.
தமிழ்க்குழவி உரை:
நலம் பயக்கும் செயல்களைச் செய்யும்போது இடையில் எத்தனை இடையூறுகள் ஏற்படினும் தளர்வின்றி துணிவோடு செய்துமுடித்தல் வேண்டும்.
Translation
Though toil and trouble face thee, firm resolve hold fast, And do the deeds that pleasure yield at last.
Explanation
Though it should cause increasing sorrow (at the outset), do with firmness the act that yield bliss (in the end).
Transliteration
Thunpam Uravarinum Seyka Thunivaatri Inpam Payakkum Vinai

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 669