|
வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
வினைத்திட்பம் வேண்டாரை - வினைத்திட்பத்தை இது நமக்குச் சிறந்தது என்று கொள்ளாத அமைச்சரை; எனைத்திட்பம் எய்தியக்கண்ணும் - ஒழிந்த திட்பங்கள் எல்லாம் உடையராயவிடத்தும்; வேண்டாது உலகு - நன்கு மதியார் உயர்ந்தோர். (மனத்தின்கண் திட்பமில்லாதார்க்குப் படை, அரண், நட்பு முதலியவற்றின் திட்பங்களெல்லாம் உளவாயினும், வினை முடியாதாம், ஆகவே, அவையெல்லாம் கெடும் என்பது பற்றி 'உலகு வேண்டாது' என்றார். இதனான் வினைத்திட்பமில்லாதாரது இழிபு கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
கருவி முதலான வெல்லாவற்றானும் திண்மை பெற்றவிடத்தும் வினையினது திண்மையை விரும்பாதாரை உலகத்தார் விரும்பார். பலபொருளும் அமைதியும் உடையார்க்கு வினைத்திட்பமின்றானால் வருங்குற்ற மென்னை யென்றார்க்கு இது கூறப்பட்டது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
வினைத்திட்பம் வேண்டாரை-வினை செய்வதில் உறுதியை விரும்பாத அமைச்சரை; எனைத்திட்பம் எய்தியக் கண்ணும்-வேறு எத்தகைய உறுதி யுடையவரா யிருப்பினும்; உலகு வேண்டாது-உயர்ந்தோர் விரும்பார். மனத்திண்மை, மதித்திண்மை, அறிவுத்திண்மை, உடல்திண்மை, வினைத்திண்மை, என அகத்திண்மை பல வகைப்படும். கருவித்திண்மை, இடத்திண்மை, காலத்திண்மை, படைத்திண்மை முதலியன புறத்திண்மையாம். இவை யெல்லா மிருந்தும் மெய்ம் முயற்சியாகிய வினைத்திண்மை யில்லாவிடத்துப் பயன்படாமையின், ' வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாதுலகு' என்றார். 'உலகு' ஆகுபெயர்.
|
|
கலைஞர் உரை:
|
|
எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
எத்தனை வகை உறுதி உடையவராக இருந்தாலும் செயல் உறுதி இல்லாதவரை உயர்ந்தோர் மதிக்கமாட்டார்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஆகையினால்) வேறு என்னென்ன பலங்கள் இருந்தாலும் மனோபலம் இல்லாதவர்களை உலகம் மதிக்காது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தொழிலின் திட்பங்களை, “இது நமக்குச் சிறந்தது." என்று கொள்ளாதவர்கள் வேறு பல திட்பங்கள் உடையவர்களாக இருந்தாலும் உயர்ந்தோர் நன்கு மதிக்க மாட்டார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
எப்படிப்பட்ட திறன் உடையவராக இருந்தாலும், தாம் செய்யும் தொழிலில் உறுதிப்பாடு இல்லாத வரை உலகம் விரும்பாது.
|
|
Translation
|
|
The world desires not men of every power possessed,
Who power in act desire not,- crown of all the rest.
|
|
Explanation
|
|
The great will not esteem those who esteem not firmness of action, whatever other abilities the latter may possess.
|
|
Transliteration
|
|
Enaiththitpam Ey Thiyak Kannum Vinaiththitpam
Ventaarai Ventaadhu Ulaku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|