Thirukural

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர்.

தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
குழல் இனிது யாழ் இனிது என்ப - குழலிசை இனிது யாழிசை இனிது என்று சொல்லுவர்; தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் - தம் புதல்வருடைய குதலைச் சொற்களைக் கேளாதவர். ('குழல்', 'யாழ்' என்பன ஆகுபெயர். கேட்டவர் அவற்றினும் மழலைச்சொல் இனிது என்பர் என்பது குறிப்பெச்சம். இனிமை மிகுதிபற்றி மழலைச்சொல்லைச் சிறப்பு வகையானும் கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் இம்மைப் பயன் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
குழலோசை யினிது, யாழோசை யினிதென்று சொல்லுவர் தம் மக்களது மழலைச் சொற்களைக் கேளாதவர்; கேட்டவர் சொல்லார்.
தேவநேயப் பாவாணர் உரை:
தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் - தம் குழந்தைகளின் குதலைச் சொற்களைக் கேட்டறியாதவர்; குழல் இனிது யாழ் இனிது என்ப-புல்லாங்குழலிசை இனிதென்றும் செங்கோட்டியாழிசை இனிதென்றுங் கூறுவர். 'குழல்' 'யாழ்' என்பன ஆகுபெயர். ஈரிசையினும் மழலைச்சொல் இனிதென்பது காதல்பற்றிய உயர்வு நவிற்சியே. செங்கோட்டியாழ் குடத்தின்மேல் போர்க்கப்பட்ட பண்டை வீணை.
கலைஞர் உரை:
தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(பேச்சை விட மழலைச் சொற்கள் அதிக இன்பமளிப்பன) தாம் பெற்ற குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்கக் கொடுத்து வைக்காதவர்கள் தாம் புல்லாங்குழல் ஓசையும் வீணையின் ஓசையும் இனிமையானவை என்று சொல்லுவார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தமது குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்டறியாதவர்கள் குழலோசையும் யாழோசையும் இனிமையாக இருக்கின்றன என்று கூறுவர்.
தமிழ்க்குழவி உரை:
தம் குழந்தைகளின் மழலைச் சொற்களின் இனிமையைக் கண்டு மகிழாதவரே, குழலின் இசையையும் யாழின் இசையையும் இனிதெனக் கூறுவர்.
Translation
'The pipe is sweet,' 'the lute is sweet,' by them't will be averred, Who music of their infants' lisping lips have never heard.
Explanation
"The pipe is sweet, the lute is sweet," say those who have not heard the prattle of their own children.
Transliteration
Kuzhal Inidhu Yaazhinidhu Enpadham Makkal Mazhalaichchol Kelaa Thavar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 66