Thirukural

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
உடற்கு இன்பம் மக்கள்மெய் தீண்டல் - ஒருவன் மெய்க்கு இன்பமாவது மக்களது மெய்யைத் தீண்டுதல்; செவிக்கு இன்பம் அவர் சொல் கேட்டல் - செவிக்கு இன்பமாவது அவரது சொல்லைக் கேட்டல். ('மற்று' வினைமாற்று. மக்களது மழலைச் சொல்லே அன்றி அவர் கற்றறிவுடையராய்ச் சொல்லுஞ் சொல்லும் இன்பமாகலின், பொதுப்படச் 'சொல்' என்றார். 'தீண்டல்', 'கேட்டல்' என்னும் காரணப்பெயர்கள் ஈண்டுக் காரியங்கள்மேல் நின்றன.)
மணக்குடவர் உரை:
தம்மக்கள் தமதுடம்பினைச் சார்தல் தம்முடம்பிற் கின்பமாம்: அவர் சொற்களைக் கேட்டல் செவிக்கின்பமாம்.
தேவநேயப் பாவாணர் உரை:
மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் - பெற்றோர்க்குத் தம் குழந்தைகளின் உடம்பைத் தொடுதல் தம் உடலுக்கு இன்பம்; அவர் சொல் கேட்டல் செவிக்கு இன்பம் - அவரது மழலைச் சொற்கேட்டல் தம் செவிக்கு இன்பம். 'மற்று' வினைமாற்று. இங்கு இன்பத்திற்குக் கரணியம், பெற்றோரின் காதலொடு குழந்தைகளின் உடம்பு நொய்ம்மையும் குரல் மழலைமையுமாம்.
கலைஞர் உரை:
தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்.
சாலமன் பாப்பையா உரை:
பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம். அவர்களின் பேச்சைக் கேட்பது காதிற்கு இன்பம்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(மேலும்) தாம் பெற்ற குழந்தைகளின் உடல் தம் உடலைத் தீண்டுவது உடலுக்கு இன்பமளிக்கும். தாம் பெற்ற குழந்தைகளின் பேச்சைக் கேட்பது காதுக்கு இன்பமளிக்கும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஒருவனுடைய உடம்புக்கு இன்பமாவது தனது மக்களுடைய உடம்பினைத் தொடுதலாகும். அவர்களுடைய சொற்களைக் கேட்டல் செவிக்கு இன்பமாகும்.
தமிழ்க்குழவி உரை:
தம் பிள்ளைகள் பெற்றோரை ஆரத்தழுவுதல் உடற்கின்பம் தரும், மற்று அம்மக்களின் மழலைச் சொற்கள் செவிகளுக்கு இன்பம் பயப்பன.
Translation
To patent sweet the touch of children dear; Their voice is sweetest music to his ear.
Explanation
The touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the ear.
Transliteration
Makkalmey Theental Utarkinpam Matru Avar Sorkettal Inpam Sevikku

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 65