|
புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
புகழொடு நன்றி பயவா வினை - தம் அரசனுக்கு இம்மைக்கண் புகழும் மறுமைக்கண் அறமும் பயவாத வினைகளை; என்றும் ஒருவுதல் லேண்டும் - அமைச்சர்க்கு எக்காலத்தும் ஒழிதல் வேண்டும். (பெருகல், சுருங்கல், இடைநிற்றல் என்னும் நிலைவேறுபாடு காலத்தான் வருதலின், 'என்றும்' என்றார். 'வேண்டும்' என்பது ஈண்டு இன்றியமையாது என்னும் பொருட்டு.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
எல்லாக் காலமும் தவிர்தல் வேண்டும், புகழொடு நன்மை பயவாத வினையை. என்று மென்றது செயலற்ற காலமுமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
புகழொடு நன்றி பயவா வினை - தம் அரசனுக்கும் தமக்கும் இம்மைக்கும் மறுமைக்கும் பொதுவாக உரிய அறமும் மறுமைக்குச் சிறப்பாகவுரிய புகழும் விளைக்காத வினைகளை; என்றும் ஒருவுதல் வேண்டும் - எக்காலத்தும் அமைச்சர் செய்யாது விட்டு விடுதல் வேண்டும். துன்பநிலைமையும் நெருக்கிடை நிலைமையும் உட்பட 'என்றும்' என்றார். இறப்பின் பின்னரே புகழ் சிறந்து தோன்றும் என்பதை, "நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும் வித்தகர்க் கல்லா லரிது." (குறள். 235) என்பதனால் அறிக
|
|
கலைஞர் உரை:
|
|
புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஆகையினால்) செய்கிறவனுக்குப் புகழும் எல்லாருக்கும் நன்மையும் உண்டாகாத காரியங்களை எப்போதும் விலக்க வேண்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
புகழியினையும் அறத்தினையும் பயனாகத் தராத தொழில்களை எக்காலத்திலும் ஒழித்து நீக்குதல் வேண்டும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
புகழையும் நன்மையையும் நல்காத செயல்பாடுகளை எந்தச் சூழலிலும் ஒருவர் தவிர்த்தல் வேண்டும்.
|
|
Translation
|
|
From action evermore thyself restrain
Of glory and of good that yields no gain.
|
|
Explanation
|
|
Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the future).
|
|
Transliteration
|
|
Endrum Oruvudhal Ventum Pukazhotu
Nandri Payavaa Vinai
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|