|
ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
துணை நலம் ஆக்கம் தரூஉம் - ஒருவனுக்குத் துணையது நன்மை செல்வம் ஒன்றனையும் கொடுக்கும்; வினை நலம் வேண்டிய எல்லாம் தரும் - அவ்வளவன்றி வினையது நன்மை அவன் வேண்டியன யாவற்றையும் கொடுக்கும். (வேண்டிய எல்லாம் என்றது இம்மைக்கண் அறம், பொருள், இன்பம் முதலாயவற்றையும்,மறுமைக்கண் தான் விரும்பிய பதங்களையும். இதனான் காணப்படும் துணை நன்மையினும் கருதப்படும் வினை நன்மை சிறந்தது என வினைத்தூய்மையது சிறப்புக் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
துணைநலம் ஆக்கத்தைக் கொடுக்கும்; வினைநலம் அவ்வளவேயன்றி வேண்டிய எல்லாவற்றையும் ஒருங்கு கொடுக்கும். துணைநலம் ஆக்கங் கொடுத்தல் எல்லாரானும் அறியப் படுதலின் ஈண்டு ஏதுவாக வந்தது
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
துணைநலம் ஆக்கம் தரும் - ஒருவனுக்குத்துணையின் நன்மை செல்வம் ஒன்றையே தரும்; வினைநலம் வேண்டிய எல்லாம் தரும் - ஆயின் , வினையின் நன்மையோ செல்வம் உட்பட ஒருவனுக்கு வேண்டிய எல்லாவற்றையும் தரும். 'வேண்டிய வெல்லாம்' என்பன, இம்மையில் அறம் பொருளின்பமும் மறுமையில் புகழ் விண்ணின்பம் வீட்டின்பமு மாம். பிறர் துணையினுந் தூய்மை சிறந்ததென வினைத்தூய்மையின் சிறப்புக் கூறப்பட்டது. 'தரூஉம்' இசைநிறையளபெடை.
|
|
கலைஞர் உரை:
|
|
ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும்; அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நல்ல துணை, செல்வம் தரும்; செயல் சுத்தமோ நாம் விரும்பிய எல்லாவற்றையும் தரும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஒருவனுடைய) துணைவர்கள் நல்லவர்களாக இருந்தால் காரியத்தில் வெற்றியும் செல்வ பலமும் உண்டாகும். ஆனால் செய்யப்புகும் காரியம் குற்றமற்ற நல்ல காரியமாக இருந்தால் விரும்பத் தகுந்த எல்லா நன்மைகளும் உண்டு.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒருவனுக்குத் துணையினது நன்மையாவது செல்வம் ஒன்றினை மட்டும் தரும். தொழிலினது நன்மையாவது அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒருவர்க்குச் சிறப்பாகத் துணை அமைந்தால் செல்வம் பெருகும் சிறப்பாகச் செயல்பாடுகள் அமைந்தால் விரும்பிய எல்லா நலனும் கிடைக்கும்.
|
|
Translation
|
|
The good external help confers is worldly gain;
By action good men every needed gift obtain.
|
|
Explanation
|
|
The efficacy of support will yield (only) wealth; (but) the efficacy of action will yield all that is desired.
|
|
Transliteration
|
|
Thunainalam Aakkam Tharuum Vinainalam
Ventiya Ellaan Tharum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|