|
தடைபட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்றத் துன்பமே துன்பப்படுவதாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் - விலங்கிய இடங்கள் எல்லாவற்றினும், சகடம் ஈர்க்கும் பகடு போல வினையை எடுத்துக் கொண்டு உய்க்க வல்லானை; உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து - வந்துற்ற இடுக்கண் தானே இடர்ப்படுதலை உடைத்து. ('மடுத்தவாய் எல்லாம்' என்பது பொதுப்பட நின்றமையின், சகடத்திற்கு அளற்று நிலம் முதலியவாகவும், வினைக்கு இடையூறுகளாகவும் கொள்க. 'பகடு மருங்கு ஒற்றியும் மூக்கு ஊன்றியும் தாள் தவழ்ந்தும்' (சீவக.முத்தி,186) அரிதின் உய்க்குமாறு போலத் தன் மெய் வருத்தம் நோக்காது முயன்று உய்ப்பான் என்பார் 'பகடு அன்னான்' என்றார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
இடுக்கண் வந்து உற்றவிடத்தெல்லாம் பகடுபோலத் தளர்வின்றிச் செலுத்த வல்லவனை உற்ற துன்பம் இடர்ப்படுதலை யுடைத்து. இது தளர்வில்லாதவன் உற்ற துன்பம் கெடுமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் - தடை ஏற்பட்ட விடமெல்லாம் பொறைவண்டி யழுந்தாது அதை இழுத்துச் செல்லும் எருதுபோல் எடுத்துக் கொண்ட வினையை விடா முயற்சியுடன் வெற்றியுறச் செய்து முடிக்க வல்லவனை ; உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து - அடைந்த துன்பம் தானே துன்பப் படுதலை யுடையதாம். 'மடுத்தவாயெல்லாம்' என்பன மேடு, பள்ளம், மணல் , சேறு முதலியனவாம். பகட்டின் தொழிலை "நிரம்பாத நீர்யாற் றிடுமணலு ளாழ்ந்து பெரும்பார வாடவர்போற் பெய்பண்டந் தாங்கி மருங்கொற்றி மூக்கூன்றித் தாடவழ்ந்து வாங்கி" என்பதனாலும் (சீவக.2784), பகடன்ணான் இயல்பை. "கழியுப்பு முகந்து கன்னாடு மடுக்கும் ஆரைச் சாகாட் டாழ்ச்சி போக்கும் உரனுடை நோன்பகட் டன்ன வெங்கோன்" என்பதனாலும் (புறம், 60), அறிக.
|
|
கலைஞர் உரை:
|
|
தடங்கல் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது போல, விடா முயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
செல்லும் வழிகளில் எல்லாம் வண்டியை இழுத்துச் செல்லும் காளையைப் போன்று மனந்தளராமல் செல்ல வல்லவனுக்கு வந்த துன்பமே துன்பப்படும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(எப்படி யென்றால்) இடையூறுகள் அதிகமாகும் போதெல்லாம் ஓர் ஏற்றத்தில் பெரும் பாரத்தை உதைத்து இழுக்கும் பொதிமாட்டைப்போல் ஊன்றி நிற்கக்கூடிய உறுதியுடையவனிடம் வந்த துன்பங்களே துன்பமடையும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
விலக்கிய இடங்களில் எல்லாம் வண்டியினைப் பெரு முயற்சியுடன் இழுத்துச் செல்லுகின்ற மாட்டினைப் போல, தொழிலினை முயன்று செய்து கொண்டு போகின்றவனைத் துன்புறுத்தும் துன்பம், தானே துன்பப்படும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தடைகள் காணினும் தளர்வின்றி வண்டியை இழுத்துச் செல்லும் காளைகள் போல ஊக்கம் உடைய ஒருவருக்கு இடர்ப்பாடுகள் இடர்பட்டொழியும்
|
|
Translation
|
|
Like bullock struggle on through each obstructed way;
From such an one will troubles, troubled, roll away.
|
|
Explanation
|
|
Troubles will vanish (i.e., will be troubled) before the man who (struggles against difficulties) as a buffalo (drawing a cart) through deep mire.
|
|
Transliteration
|
|
Matuththavaa Yellaam Pakatannaan Utra
Itukkan Itarppaatu Utaiththu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|