|
துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
இடும்பைக்கு இடும்பை படாஅதவர் - வினை செய்யுங்கால் அதற்கு இடையே வந்த துன்பத்திற்கு வருந்தாதவர்; இடும்பைக்கு இடும்பை படுப்பர் - அத்துன்பந்தனக்குத் தாம் துன்பம் விளைப்பர். (வருந்துதல் - இளைத்துவிட நினைத்தல். மனத் திட்பமுடையராய் விடாது முயலவே வினை முற்றுப்பெற்றுப் பயன்படும். படவே, எல்லா இடும்பையும் இலவாம் ஆகலின், 'இடும்பைக்கு இடும்பை படுப்பர்' என்றார். வருகின்ற பாட்டு இரண்டினும் இதற்கு இவ்வாறே கொள்க. சொற்பொருட் பின்வருநிலை.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
துன்பத்திற்குத் துன்பத்தைச் செய்வார், அத் துன்பத்திற்குத் துன்ப முறாதவர். இது பொறுக்க வேண்டுமென்றது. இவை மூன்றும் பொதுவாகக் கூறப்பட்டன
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
இடும்பைக்கு இடும்பை படாதவர்-துன்பம் வருங்கால் துன்பப் படாதவர்; இடும்பை படுப்பர் - அத்துன் பத்திற்கே துன்பஞ் செய்வர். துன்பத்தின் நோக்கமே வருத்துதலாதலின், அத்துன்பத்திற்கு வருந்தாதவர் அதன் நோக்கத்தைத் தோற்கடித்தலால் அத்துன்பத்தையே வருத்துவர் என்றார். இதனால் துன்பத்தால் தடையுறாது வினை இனிது முடியும் என்பதாம். இதில் வந்துள்ளது சொற்பொருட்பின்வரு நிலையணி. வருகின்ற இரு குறளிலும் துன்பம் துன்பப்படும் என்பதற்கு இவ்வாறே உரைக்க.
|
|
கலைஞர் உரை:
|
|
துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
வரும் துன்பத்திற்குத் துன்பப்படாத மன ஊக்கம் உள்ளவர். துன்பத்திற்குத் துன்பம் தருவர்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அறிவுடையவர்கள் இடையூறுகளால் துன்பப்படாமல் இருப்பார்கள். அதோடு,) இடையூறுகளைக் கண்டு துன்பப்படாத மன உறுதியுடைய அந்த அறிவாளிகள் தங்களிடம் வந்த இடையூறுகளே துன்பப்படும்படி செய்துவிடுவார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தொழில் செய்யும்போது இடையில் வந்த துன்பங்களுக்குத் துன்பப்படாதவர்கள், வந்த அத்துன்பங்களுக்குத் துன்பத்தினை உண்டாக்கி விடுவர்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
துன்பம் வருகின்ற பொழுது அது கண்டு துயருறாமல் துன்பத்திற்குத் துன்பம் செய்யும் துணிவு பெற்றிருப்பின் தோல்வியே இல்லை.
|
|
Translation
|
|
Who griefs confront with meek, ungrieving heart,
From them griefs, put to grief, depart.
|
|
Explanation
|
|
They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow.
|
|
Transliteration
|
|
Itumpaikku Itumpai Patuppar Itumpaikku
Itumpai Pataaa Thavar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|