Thirukural

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்உள்ளத்தின் உள்ளக் கெடும்.

வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
வெள்ளத்து அனைய இடும்பை - வெள்ளம்போலக் கரையிலவாய இடும்பைகள் எல்லாம்; அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் - அறிவுடையவன் தன் உள்ளத்தான் ஒன்றனை நினைக்க, அத்துணையானே கெடும். (இடும்பையாவது உள்ளத்து ஒரு கோட்பாடேயன்றிப் பிறிதில்லை என்பதூஉம், அது மாறுபடக்கொள்ள நீங்கும் என்பதூஉம் அறிதல் வேண்டுதலின், 'அறிவுடையான்' என்றும், அவ்வுபாயத்தது எண்மை தோன்ற 'உள்ளத்தின் உள்ள' என்றும் கூறினார்.இவை இரண்டு பாட்டானும் ஊழினான் ஆய இடுக்கணால் அழியாமைக்கு உபாயம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
வெள்ளம்போன்ற துன்பம், அறிவுடையவன் நெஞ்சினாலே வினைப்பயனென்று நினைக்கக் கெடும். இது பலவா யொருங்கு வரினும், அறிவுடையா னுற்ற இடுக்கண் கெடுமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
வெள்ளத்து அனைய இடும்பை -வெள்ளம்போல் ஏராளமாக வந்த துன்பங்களெல்லாம்; அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் -அறிவுடையவன் அவற்றால் ஒன்று மில்லை யென்று தன் மனத்தில் நினைத்த மட்டில் நீங்கி விடும். இன்பமுந் துன்பமும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்தனவென்றும், ஒரு துன்பத்தை இன்பமென்றெண்ணின் அதனால் ஒரு தொல்லையுமில்லை யென்றும், உண்மை யறிந்தவனை 'அறிவுடையான்' என்றும், அவன் துன்பத்தை வெல்லும் விரகு (உபாயம்)ஒரு நொடிநேர நினைவே யென்பார் 'உள்ளக்கெடும்' என்றும், கூறினார்.
கலைஞர் உரை:
வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம் விலகி ஓடி விடும்.
சாலமன் பாப்பையா உரை:
வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
கடலைப் போன்ற பெரிய துன்பமும் அறிவுடையவர் களுடைய மனவலிமையினால் நினைத்தவுடன் மறைந்துவிடும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
வெள்ளம் போலக் கரையில்லாத துன்பங்கள் (இடும்பைகள்) எல்லாம், அறிவுடையவன் தனது உள்ளத்தினாலே நினைத்துப் பார்க்க அப்பொழுதே கெடும்.
தமிழ்க்குழவி உரை:
பெருவெள்ளம் போல பெருகியே வரும் துன்பங்கள். ஆனால் அறிவுடையார் உள்ளத்தால் ஓர்ந்து உறுதியுடன் எதிர்கொள்வாராயின் துன்பங்கள் இல்லாமல் ஆகிவிடும்.
Translation
Though sorrow, like a flood, comes rolling on, When wise men's mind regards it,- it is gone.
Explanation
A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow.
Transliteration
Vellath Thanaiya Itumpai Arivutaiyaan Ullaththin Ullak Ketum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 622