Thirukural

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்பட்டுப்பா டூன்றுங் களிறு.

உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானைத் தன் பெருமையை நிலைநிறுத்தும், அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
களிறு புதை அம்பின் பட்டுப்பாடு ஊன்றும் - களிறு புதையாகிய அம்பால் புண்பட்ட இடத்துத் தளராது தன் பெருமையை நிலைநிறுத்தும்; உரவோர் சிதைவிடத்து ஒல்கார் - அதுபோல ஊக்கமுடையார் தாம் கருதிய உயர்ச்சிக்குச் சிதைவுவந்த இடத்துத் தளராது தம் பெருமையை நிலை நிறுத்துவர்.' (புதை - அம்புக்கட்டு : பன்மை கூறியவாறு. 'பட்டால்' என்பது 'பட்டு' எனத் திரிந்து நின்றது. ஒல்காமை களிற்றுடனும், பாடு ஊன்றுதல் உரவோருடனும் சென்று இயைந்தன. தள்ளினும் தவறாது உள்ளியது முடிப்பர் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஊக்கம் உடையாரது உயர்ச்சி கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தளர்ச்சி வந்தவிடத்துத் தளரார் உள்ள மிகுதியுடையார்: மெய் புதைந்த அம்பினுட்பட்டும் பாடூன்றும் களிறுபோல. இஃது உயிர்க்கேடு வரினுந் தளரார் என்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
களிறு புதை அம்பிற் பட்டுப் பாடு ஊன்றும்-போர்யானை தன் உடம்பில் ஆழப்பதிந்த அம்பினாற் புண்பட்ட விடத்துந் தளராது தன் பெருமையை நிலை நிறுத்தும் ; உரவோர் சிதைவிடத்து ஒல்கார் -அதுபோல ஊக்க முடையோர் தாம் கருதிய வெற்றிக்குத் தடையாகத் துன்பம் நேர்ந்தவிடத்தும் தளராது தம் பெருமையை நிலைநாட்டுவர். உவமமும் பொருளுங் கொண்ட அடைகள் இரண்டிற்கும் பொதுவாதலின், ஒல்காமை களிற்றுடனும் பாடூன்றுதல் உரவோருடனுஞ் சென்றியைந்தன. தாம் மேற்கொண்ட வினைக்குத் தடையாகப் பேரிடுக்கண் நேரினும், தளராது தாம் கருதியதை முடிப்பர் என்பது ,உவமத்தாற் பெறப்படும்.முந்தின குறள் ஊழால் தடைப்படும் வினையையும், இக்குறள் இடையூற்றால் தடைப்பட்டு விடா முயற்சியால் வெல்லப் படும் வினையையும் குறித்தன வென வேறுபாடறிக.
கலைஞர் உரை:
உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
தன்மீது அம்புகள் புதைந்து புண்பட்டபோதும் யானை தளராமல் தன் பெருமையை நிலைநிறுத்தும்; இதுபோல ஊக்கம் உடையவர் தமக்கு கேடு வந்த போதும் ஊக்கம் இழக்கமால் தம் பெருமையை நிலைநிறுத்துவர்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஊக்கமுடையவர்கள் உயர்ந்த காரியங்களை முயலும் போது இடையூறுகளுக்கு அஞ்சிவிடமாட்டார்கள்.) யானையானது தன்னுடைய உடலில் அம்பு புதைந்து புண்படப் பட முன்னிலும் அதிக உறுதியோடு எதிர்க்கும். அதைப்போல ஊக்கமுடையவர்கள் தம்முடைய முயற்சிகளுக்கு இடையூறு வந்தாலும் பின் வாங்காமல் முன்னிலும் ஊக்கத்தோடு முயல்வார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
யானையானது புதையாகிய அம்பினால் புண்பட்ட போதும், தளராமல் நின்று தனது பெருமையினை நிலைநிறுத்தும். அதுபோல ஊக்கம் உடையவர்கள், தாம் கருதிய உயர்ச்சிக்குச் சிதைவு வந்த போதும் மனம் தளரமாட்டார்கள், தமது பெருமையினை நிலை நிறுத்துவார்கள்..
தமிழ்க்குழவி உரை:
போர்க்களத்தில் அம்புகள் துளைத்தபோதும் யாளை துணிந்து நிற்றல்போல் உள்ள உறுதி உடையவர்கள் இடர்ப்பாடுகள் கண்டு தளர்ந்துவிட மாட்டார்கள்.
Translation
The men of lofty mind quail not in ruin's fateful hour, The elephant retains his dignity mind arrows' deadly shower.
Explanation
The strong minded will not faint, even when all is lost; the elephant stands firm, even when wounded by a shower of arrows.
Transliteration
Sidhaivitaththu Olkaar Uravor Pudhaiyampir Pattuppaa Toondrung Kaliru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 597