|
ஊக்கம் இல்லாதவர் இவ்வுலகில் யாம் வண்மை உடையேம் என்றுத் தம்மைத் தான் எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடையமாடடார்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
உள்ளம் இல்லாதவர் - ஊக்கம் இல்லாத அரசர்; உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு எய்தார் - இவ்வுலகத்தாருள் வண்மையுடையேம் என்று தம்மைத்தாம் மதித்தலைப் பெறார். (ஊக்கம் இல்லையாகவே முயற்சி, பொருள், கொடை, செருக்கு இவை முறையே இலவாம் ஆகலின், 'செருக்கு எய்தார்' என்றார். கொடை, வென்றியினாய இன்பம் தமக்கல்லாது பிறர்க்குப் புலனாகாமையின் தன்மையால் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
உள்ளமிகுதியில்லாதார் உலகின்கண் வண்மையுடைமை யென்னுங் களிப்பினைப் பெறார்.
இஃது உள்ளமிகுதி யில்லாதார்க்குப் பொருள்வரவு இல்லையாம் ஆதலான் அவர் பிறர்க்கு ஈயமாட்டாரென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
உள்ளம் இலாதவர்-ஊக்கமில்லாத அரசரும் பெருஞ்செல்வரும்; உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு எய்தார் -இவ்வுலகத்தில் யாமே வண்மையுடையேம் என்று மகிழ்வொடு கருதும் பெருமிதம் பெறார்.
ஊக்கமில்லாதவர்க்கு அதனாலுண்டாகும் முயற்சியும், முயற்சியாலுண்டாகும் பொருளும் ,பொருளாலுண்டாகும் கொடையும் , கொடையாலுண்டாகும் செருக்கும் இல்லையாதலின் , வள்ளிய தீயதுமான இருவகைச் செருக்குள் ,இங்குக் குறித்தது நல்லது என அறிக.
"கல்வி தறுகண் இசைமை கொடையெனச்
சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே".
என்பது தொல்காப்பியம் (மெய்ப்பாட்டியல், 6).
|
|
கலைஞர் உரை:
|
|
அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப்
பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஊக்கம் இல்லாதவர் பிறர்க்கு உதவும் வள்ளல் யாம் என்னும் மன உயர்வைப் பெறமாட்டார்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அப்படிப்பட்ட ஊக்கமில்லாதவர்கள் சிறப்புக்களை உடையவர்கள் என்ற பெருமை அடைய முடியாது.) ஊக்கம் இல்லாதவர்கள் நல்லவர்கள் என்ற புகழையும் அதனால் வரும் இன்பங்களையும் அடைய முடியாது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஊக்கம் இல்லாதவர்கள் இவ்வுலகத்தாருள் யாம் வண்மையுடையேம் என்று தம்மைத் தாமே மதிக்கும் பெருமையினைப் பெறமாட்டார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
முயற்சியும் உள்ள உறுதியும் இல்லாதவர்கள் உலகத்தில் வள்ளண்மையுடையோம் என்னும் பெருமை பெற்று வாழ்தல் இயலாது.
|
|
Translation
|
|
The soulless man can never gain
Th' ennobling sense of power with men.
|
|
Explanation
|
|
Those who have no (greatness of) mind, will not acquire the joy of saying in the world, "we have excercised liaberality".
|
|
Transliteration
|
|
Ullam Ilaadhavar Eydhaar Ulakaththu
Valliyam Ennunj Cherukku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|