|
எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ் வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் - அரசராயினார் கருதுவதெல்லாம் தம் உயர்ச்சியையே கருதுக; அது தள்ளினும் தள்ளாமை நீர்த்து - அவ்வுயர்ச்சி பால்வகையாற் கூடிற்றில்லையாயினும், அக்கருத்துத் தள்ளாமை நீர்மையுடைத்து. (உம்மை, தள்ளாமை பெரும்பான்மையாதல் விளக்கிற்று. தள்ளிய வழியும் தாளாண்மையில் தவறின்றி நல்லோரால் பழிக்கப் படாமையின், தள்ளா இயற்கைத்து என்பதாம். மேல் 'உள்ளத்து அனையது உயர்வு' என்றதனையே வற்புறுத்தியவாறு.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நினைப்பனவெல்லாம் உயர்வையே நினைக்க: அந்நினைவு முடியாமல் தப்பினும் முயன்று பெற்றதனோடு ஒக்கும்.
இது தப்பினும் பழிக்கப்படா தென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் -அரசராயினும் பிறராயினும் தாம் கருதுவதெல்லாம் தம் உயர்ச்சி பற்றிய கருத்ததாகவே யிருக்க; மற்று-பின்பு ;அது தள்ளினும் தள்ளாமை நீர்த்து - அவ்வுயர்ச்சி ஊழ்வலியால் தவறினும் தவறாத தன்மையதே.
உயர்வு தவறினும், உள்ளினவரின் உயரிய நோக்கத்தையும் அவர் செய்த பெருமுயற்சியையும் அறிவுடையோர் பாராட்டுவராதலானும்.
"தெய்வத்தா னாகா தெனினு முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்." (குறள்.620.) ஆதலானும்,
' தள்ளாமை நீர்த்து 'என்றார். உம்மை தள்ளுவதன் அருமை குறித்து நின்றது.
|
|
கலைஞர் உரை:
|
|
நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்க வேண்டும். அது
கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நினைப்பது எல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கட்டும். அவ்வுயர்வான எண்ணம் ஒருவேளை வேறு காரணங்களால் நிறைவேறாது போனாலும், பெரியோர் நம்மைப் பாராட்டுவர். ஆகவே, அது நிறைவேறியதாகவே கருதப்படும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
ஊக்கம் கொள்ள வேண்டுமென்பதெல்லாம் உயர்ந்த நல்ல காரியங்களுக்குத்தான். மற்றக் கீழான ஆசைகளுக்கு ஊக்கம் வேண்டியதில்லை. ஏனெனில், கீழான எண்ணங்கள் விலக்கி னாலும் விலக்க முடியாதபடி இயல்பாகவே மனிதப் பிறவியில் இருக்கின்றன.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தாங்கள் கருத்துவதெல்லாம் தங்களின் உயர்ச்சியினையே கருதுதல் வேண்டும். அவ்வுயர்ச்சி கூடிவரவில்லையென்றாலும், அக்கருத்து தள்ளாத தன்மையினை உடையதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
எண்ணுவதெல்லாம் எப்போதும் உயர்வாகவே எண்ண வேண்டும். உடனடியாக அவ்வெண்ணம் நிறைவேறாத போதும் கூட அவ்வெண்ணத்தைக் கைவிடலாகாது."
|
|
Translation
|
|
Whate'er you ponder, let your aim be loftly still,
Fate cannot hinder always, thwart you as it will.
|
|
Explanation
|
|
In all that a king thinks of, let him think of his greatness; and if it should be thrust from him (by fate), it will have the nature of not being thrust from him.
|
|
Transliteration
|
|
Ulluva Thellaam Uyarvullal Matradhu
Thallinun Thallaamai Neerththu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|