|
ஊக்கத்தை உறுதியாகத் தம்கைப் பொருளாக உடையவர், ஆக்கம்( இழந்து விட்டக்காலத்திலும்) இழந்து விட்டோம் என்று கலங்க மாட்டார்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் - இழந்தாராயினும் யாம் கைப்பொருளை இழந்தேம் என்று அலமரார்; ஒருவந்தம் ஊக்கம் கைத்து உடையார் - நிலைபெற்ற ஊக்கத்தைக் கைப்பொருளாக உடையார். ('ஆக்கம்' ஆகுபெயர். ஒருவந்தம் ஆய ஊக்கம் என்க. கைத்து - கையகத்தாய பொருள்: 'கைத்துண்டாம் போழ்தே கரவாது அறம் செய்ம்மின்' (நாலடி.19) என்றார் பிறரும். அல்லாவாமைக்கு ஏது, வருகின்ற பாட்டால் கூறுப.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
செல்வத்தை இழந்தோமென்று அலமரார்; உள்ள மிகுதியை ஒரு தலையாகத் தம்மாட்டுடையார்.
இது பொருட்கேடுவரினுந் தளராரென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
ஊக்கம் ஒருவந்தம் கைத்து உடையார் - ஊக்கத்தை நிலையாகக் கைப்பொருளாகக் கொண்டவர் ; ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் - தம் செல்வத்தை யிழந்தாராயினும் அதை யிழந்தேம் என்று துன்புறார்.
ஊக்கத்தினால் வேறு பொருள் புதிதாகத்தேடிக் கொள்ளலா மாதலின் , 'அல்லாவார்' என்றார் . ஒருவந்தம் நிலைபேறு. அது இங்கு நிலைபேறாக என்று பொருள் படுதலாற் குறிப்பு வினையெச்சம். பெயரெச்சமாயின் ஒருவந்தக் கைத்து என ஈறுகெட்டுப் புணர்ந்திருக்கும். கையிலுள்ள பொருள் கைத்து . கையது - கைத்து (கை+து). ஆக்கத்தை உண்டாக்குவது ஆக்கம்; ஆகுபெயர்.ஆதல் வளர்தல், மேம்படுதல். ஆ-ஆகு-ஆக்கம். செல்வம் நிலையான கைத்தன்மை. 'கைத்துண்டாம் போழ்தே கரவாதறஞ் செய்ம்மின் '(நாலடி.19) என்பதனால் அறியப்படும்.
|
|
கலைஞர் உரை:
|
|
ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், ஆக்கம் இழக்க
நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்க மாட்டார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஊக்கத்தைத் தம் கைவசம் கொண்டவர், செல்வத்தை இழந்தாலும், இழந்து விட்டோமோ என்று மனம் கலங்க மாட்டார்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
உண்மையாக ஊக்கமுடையவர்கள் தமக்குள்ள பொருட் செல்வத்தை யெல்லாம் இழந்துவிட்டாலும், அதற்காக வருத்தப்பட மாட்டார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நிலைபெற்ற ஊக்கத்தினைக் கைப்பொருளாகக் கொண்டவர்கள் இழந்தாராயினும், கைப்பொருளை இழந்தோம் என்று மனம் வருந்த மாட்டார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பெருஞ்செல்வத்தை இழந்த பொழுதிலும் கூட மன உறுதி மிக்க ஊக்கம் உடையோர் இழந்து விட்டோமே என்று அல்லற்படுவது இல்லை.
|
|
Translation
|
|
'Lost is our wealth,' they utter not this cry distressed,
The men of firm concentred energy of soul possessed.
|
|
Explanation
|
|
They who are possessed of enduring energy will not trouble themselves, saying, "we have lost our property".
|
|
Transliteration
|
|
Aakkam Izhandhemendru Allaavaar Ookkam
Oruvandham Kaiththutai Yaar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|