|
சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அசைவு இலா ஊக்கம் உடையான் உழை - அசைவில்லாத ஊக்கத்தை உடையான்மாட்டு; ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் - பொருள் தானே வழி வினவிக் கொண்டு செல்லும். (அசைவு இன்மை - இடுக்கண் முதலியவற்றான் தளராமை. வழி வினவிச் சென்று சார்வார் போலத்தானே சென்று சாரும் என்பார், 'அதர்வினாய்ச் செல்லும்' என்றார். எய்திநின்ற பொருளினும் அதற்குக் காரணமாய ஊக்கம் சிறந்தது என்பது, இவை நான்கு பாட்டானும் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அசைவில்லாத ஊக்கமுடையான்மாட்டு ஆக்கம், தானே வழி கேட்டுச் செல்லும்.
நினைத்ததனாலே ஊக்கமுண்டாமோ- என்றார்க்கு இது கூறப்பட்டது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
ஆக்கம்-செல்வம்; அசைவு இலா ஊக்கம் உடையான் உழை-தளர்வில்லாத ஊக்க முள்ளவனிடத்திற்கு; அதர்வினாய்ச் செல்லும்- தானாகவே வழி வினவிக்கொண்டு செல்லும்.
ஊக்க முள்ளவனுக்கு ஆக்கம் எளிதாய்க்கிட்டும் என்பது கருத்து. அசைவின்மை இடுக்கண், மெய்வருத்தம் முதலிய வற்றால் தளராமை. இந்நான்கு குறளாலும், இருக்கின்ற செல்வத்தினும் அதற்கு ஏதுவான ஊக்கம் சிறந்த தென்பது கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து
அவர்களிடம் போய்ச் சேரும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தளராத ஊக்கம் உள்ளவனிடம், செல்வமானது தானே அவன் முகவரியை அறிந்து செல்லும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
உறுதியான ஊக்கமுடையவன் இருக்கிற இடத்தை நாடி, வழி விசாரித்துக் கொண்டு செல்வம் தானாகவே அவனிடம் போய்ச் சேரும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அசைவில்லாத ஊக்கத்தினை உடையவன் இருக்கும் இடத்திற்குப் பொருள் தானே வழிதேடிக்கொண்டு போகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தளராத ஊக்கம் உடையவர்கள் வாழ்வில் செல்வம் முதலாய ஏனைய சிறப்புகள் எல்லாம் தானே வந்து சேரும்.
|
|
Translation
|
|
The man of energy of soul inflexible,
Good fortune seeks him out and comes a friend to dwell.
|
|
Explanation
|
|
Wealth will find its own way to the man of unfailing energy.
|
|
Transliteration
|
|
Aakkam Adharvinaaich Chellum Asaivilaa
Ookka Mutaiyaa Nuzhai
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|