|
ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும், மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
உள்ளம் உடைமை உடைமை - ஊக்கம் உடைமையே ஒருவனுக்கு நிலைநின்ற உடைமையாவது; பொருள் உடைமை நில்லாது நீங்கிவிடும் - மற்றைப் பொருள் உடைமை நிலைநில்லாது நீங்கிப்போம். ('உள்ளம்' ஆகுபெயர். ஊக்கம் உள்ளத்துப் பண்பாகலின், அதற்கு நிலை நிற்றலும், பொருள் உடம்பினும் வேறாய் அழிதல் மாலைத்து ஆகலின், அதற்கு நிலை நில்லாமையும் கூறினார். கூறவே, அஃது உடைமையன்று என்பது பெறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
உடைமையாவது ஊக்கமுடைமை; பொருளுடைமை நிலை நில்லாது நீங்கும்.
பொருள் உடையார்க்கு எல்லா முண்டாம் என்பார்க்கு இது கூறப்பட்டது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
உள்ளம் உடைமை உடைமை - முயற்சியுள்ள முடைமையே ஒருவனுக்கு நிலையான உடைமையாவது ; பொருள் உடைமை நில்லாது நீங்கிவிடும் - மற்றப் பொருளுடைமை எவ்வளவு பெரிதேனும் தன்னிடம் நில்லாது நீங்கிவிடும்.
ஊக்கத்தினாற் புதுச்செல்வம் உண்டாக்கப்படுவதுடன் பழஞ்செல்வமும் பாதுகாக்கப்படும். 'குந்தித் தின்றாற் குன்றுங் குன்றும்' . ஊக்கம் உள்ளப்பண்பாதலின் அதை ஒருவரும் கவரமுடியாது . செல்வம் இயற்கையினாலும் செயற்கையினாலும் பல்வேறு வகையில் அழிந்துபோம் . ஆதலால் உண்மையான வுடைமை ஊக்கமே என்பதாம் . 'உள்ளம்' ஆகுபெயர் அன்று. அது ஊக்கம் என்பதன் ஒருபொருள் மறுசொல் . உள் - உய் - உயல் - உயற்று - உஞற்று = முயற்சி . ஒ. நோ : முயல் - முயற்று. உள்ளுதல் முன்தள்ளுதல். உள் - உள்ளம். மனத்தைக் குறிக்கும் உள்ளம் என்னும் சொல் உள்ளிருப்பது என்று பொருள்படுதலால் அது வேறாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான
உடைமை என்று கூற இயலாது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
மன ஊறுதியே நிலையான உடைமை; செல்வம் உடைமையோ நிலைத்திராமல் நீங்கிவிடும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஏன் என்றால்) ஊக்கம் என்ற உள்ளத்திலிருக்கிற உடைமைதான் எப்போதும் நீங்காமல் தன்னிடமே இருக்கக்கூடிய உடைமை. வெறும் பொருள் உடைமை. நிலையற்றது; ஒருவனை விட்டு வேறொருவனிடம் போய்விடக் கூடியது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஊக்கம் உடையவராக இருப்பதே ஒருவர்க்கு நிலையான உடைமையாகும். மற்றபடி பொருள் உடைமை யென்பது நிலையாக நில்லாமல் நீங்கிவிடும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
உள்ள உறுதியே ஒருவர்க்கு உடைமை எனப்படும். பொருள் உடைமையானது நிலையில்லாதது. எப்போது வேண்டுமானாலும் நீங்கி விடும் தன்மையது.
|
|
Translation
|
|
The wealth of mind man owns a real worth imparts,
Material wealth man owns endures not, utterly departs.
|
|
Explanation
|
|
The possession of (energy of) mind is true property; the possession of wealth passes away and abides not.
|
|
Transliteration
|
|
Ullam Utaimai Utaimai Porulutaimai
Nillaadhu Neengi Vitum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|