|
(ஆட்சிமுறை கெட்டுக்) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
சூழாது கோல் கோடிச் செய்யும் அரசு - மேல் விளைவது எண்ணாது முறைதப்பச் செய்யும் அரசன், கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் - அச்செயலான் முன் ஈட்டிய பொருளையும் பின் ஈட்டுதற்கு ஏதுவாகிய குடிகளையும் சேர இழக்கும். ('கோடல்' என்பது திரிந்து நின்றது. முன் ஈட்டிய பொருள் இழத்தற்கு ஏது, வருகின்ற பாட்டான் கூறுப.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பொருளையும் பொருள்தரும் குடியையும் கூட இழப்பன், முறை கோடி ஆராயாது செய்யும் அரசன்.
இஃது ஆராயாது செய்வதனால்வருங் குற்றங் கூறிற்று.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
சூழாது கோல் கோடிச் செய்யும் அரசு - தன்குடி கட்கு நன்மையையும் தன்தவற்றால் மேல் விளைவதையும் எண்ணாது கொடுங்கோலாட்சி செய்யும் அரசன் ; கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் - தன் செல்வத்தையும் குடிகளையும் ஒருசேர இழப்பான்.
வறட்சிக்காலத்து மக்கள் வானை ஆவலாக எதிர்நோக்குவது போல், கொடுங்கோலரசன் குடிகளும் செங்கோலரசனொருவன் வரவை எதிர்பார்ப்பராதலின், அத்தகைய அரசன் அக்கொடுங்கோலனை எளிதில் வென்று அவன் நாட்டைக் கைப்பற்றுவன் என்பதாம் . கூழ் என்றது தன் முன்னோருந்தானும் தேடிய பொருளை. குடியை இழப்பதனால் , அவரிடத்தினின்று இனிப் பெறக்கூடிய பொருளைமட்டு மன்றி அவரையாளும் ஆட்சியையே இழந்துவிடு பவனாவன்.
|
|
கலைஞர் உரை:
|
|
நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு நிதி
ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
மேல்வருவதை எண்ணாது, தவறாக ஆள்பவன் தன் செல்வத்தையும், செல்வம் தரும் குடிமக்களையும் சேர்ந்தே இழந்துவிடுவான்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(மேலும்) அரசுக்குரிய முறை கெட்டு அமைச்சர்களுடன் ஆலோசிக்காமல் தன் இச்சைப்படி ஆட்சி நடத்துகிற கொடுங்கோல் அரசன் தன் செல்வச் சிறப்பையும் குடிகளுடைய அபிமானத்தையும் ஒருமிக்க இழந்துவிடுவான்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பின்னர் விளைவதனையறியாமல் முறைதப்பச் செய்யும் அரசன், அச்செயலால் முன்பு ஈட்டிய பொருளையும் பின்பு ஈட்டுவதற்கு ஏதுவாகிய குடிமக்களையும் இழப்பான்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நீதிமுறை தவறி எதையும் ஆய்ந்து செய்யாத அரசு அமையுமெனில் அந்நாட்டில் விளைச்சலும் குன்றும், நாட்டு மக்களும் அவதியுற்று அல்லற்படுவர்.
|
|
Translation
|
|
Whose rod from right deflects, who counsel doth refuse,
At once his wealth and people utterly shall lose.
|
|
Explanation
|
|
The king, who, without reflecting (on its evil consequences), perverts justice, will lose at once both his wealth and his subjects.
|
|
Transliteration
|
|
Koozhung Kutiyum Orungizhakkum Kolkotich
Choozhaadhu Seyyum Arasu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|