|
(முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே - அரசன் முறை செய்யாமையால் குடிகள் துன்பமுற்று அதனைப் பொறுக்க மாட்டாது அழுத கண்ணீரன்றே, செல்வத்தைத் தேய்க்கும் படை - அவன் செல்வத்தைக் குறைக்கும் கருவி. (அழுத கண்ணீர்: அழுதலான் வந்த கண்ணீர் - 'செல்வமாகிய மரத்தை' என்னாமையின், இஃது ஏகதேச உருவம். அல்லற்படுத்திய பாவத்தது தொழில் அதற்கு ஏதுவாகிய கண்ணீர்மேல் நின்றது, அக் கண்ணீரில் கொடிது பிறிது இன்மையின். செல்வம் கடிதின் தேயும் என்பது கருத்து.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நீதியல்லன செய்தலானே அல்லற்பட்டு அதற்கு ஆற்றாது அழுத கண்ணீரன்றோ செல்வத்தைத் தேய்க்கும் ஆயுதம்.
இஃது இவ்வரசன் கெடுமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அல்லல் பட்டு ஆற்றது அழுத கண்ணீர் அன்றே - குடிகள் அரசனது கொடுங்கோலாட்சியால் துன்பப்பட்டு அதைப்பொறுக்க முடியாது அழுத கண்ணீரன்றோ ; செல்வத்தை தேய்க்கும் படை - அவ்வரசனின் ஆட்சிச் செல்வத்தை அழிக்கும் படைக்கலம்.
கொடுங்கோலரசன் கொடுமையைக் குடிகளின் ஆற்றொணாத் துயரநெஞ்சே போக்கிவிடும் . அதற்கு வேற்றரசன் வினைவேண்டியதில்லை யென்பது கருத்து . செல்வத்தை யழிப்பது துயரநெஞ் சேயாயினும், அதை வெளிப்படையாகத் தெரிவிப்பது கண்ணீராதலால் , அழிப்புவினை கண்ணீரின்மே லேற்றப்பட்டது . செல்வத்தை மரமாக உருவகியாமையின் இது ஒருமருங் குருவகம் . ஏகாரம் வினா . எளியோரை வலியோர் வாட்டினால் வலியோரைத் தெய்வம் வாட்டும் . ஆதலால், கொடுங்கோலரசனை இறைவனே அழித்து விடுவான் என்பது கருத்து.
|
|
கலைஞர் உரை:
|
|
கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை
அழிக்கும் படைக்கருவியாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(எப்படி யென்றால்) கொடுங்கோல் ஆட்சியினால் துன்ப மடைந்து பொறுக்க முடியாமல் குடிமக்கள் அழுது வடிக்கின்ற கண்ணீரே அந்த ஆட்சியின் செல்வத்தை அழித்துவிடக்கூடிய ஆயுதமாகும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
குடிமக்கள் அரசனால் துன்பப்பட்டு அதனைப் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீரல்லவா, அவனுடைய செல்வத்தினைக் குறைக்கும் கருவியாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அல்லற்பட்டு மக்கள் ஆற்றாமையால் அழுகின்ற கண்ணீரே, அறம் பிறழ்ந்த அரசின் செல்வமெலாம் அழித்தொழிக்கும் படையாகும்.
|
|
Translation
|
|
His people's tears of sorrow past endurance, are not they
Sharp instruments to wear the monarch's wealth away?.
|
|
Explanation
|
|
Will not the tears, shed by a people who cannot endure the oppression which they suffer (from their king), become a saw to waste away his wealth ?.
|
|
Transliteration
|
|
Allarpattu Aatraadhu Azhudhakan Neerandre
Selvaththaith Theykkum Patai
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|