|
நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நாள்தொறும் நாடி முறை செய்யா மன்னவன் - தன் நாட்டு நிகழும் தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கு ஒக்க முறைமையைச் செய்யாத அரசன், நாள்தொறும் நாடு கெடும் - நாள்தோறும் நாடு இழக்கும். (அரசனுக்கு நாடு, உறுப்பு ஆகலின், அதன் வினை அவன்மேல் நின்றது.இழத்தல்: பயன் எய்தாமை. 'மன்னவன் நாடு நாள்தொறும்கெடும்' என்று உரைப்பாரும் உளர்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
குற்றமும் குணமும் நாடோறும் ஆராய்ந்து அதற்குத் தக்க முறை செய்யாத அரசன் நாடு நாடோறும் கெடும்.
இது நாடு கெடுமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் - தன் நாட்டில் நிகழும் நன்மை தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கேற்ப முறை செய்யாத அரசன் ; நாள்தொறும் நாடு கெடும் - நாள்தோறும் நாடிழப்பான்.
நாள்தொறும் நாடிழத்தலாவது,
"கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி
வேத்திய லிழந்த வியனிலம்
..........................................
நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்து வதால்" . (சிலப். 11:60 - 45) வரவர வளங்குன்றுதலும் , குடிகளின் அரசப்பற்றுக் குறைதலும், பகைவரால் அல்லது அருள்பூண்ட செங்கோலரசராற் சிறிது சிறிதாக நிலங்கைப்பற்றப் பெறுதலுமாம் . நாடு அரசிற்கு உறுப்பாகலின், சினைவினை முதல்மேல் நின்றது.
"குற்றமும் குணமும் நாடோறும் ஆராய்ந்து , அதற்குத் தக முறைசெய்யாத அரசன் நாடு நாடோறும் கெடும் என்றவாறு" , என்பது மணக்குடவருரை .
|
|
கலைஞர் உரை:
|
|
ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து
அவற்றிற்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு
சீர்குலைந்து போய்விடும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நாட்டில் நடக்கும் தீமைகளை நாளும் பார்த்து, ஆராய்ந்து, ஏற்ற நீதியை வழங்காத ஆட்சியாளன் தன் பதவியை நாளும் இழப்பான்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(குடிகளின் நிலைமையை விசாரித்தறியாமல் எதையும் செய்வதும் கொடுங்கோலாகும்.) நாள்தோறும், விசாரிக்கவேண்டிய வற்றை விசாரித்து, நியாயம் வழங்காத கொடுங்கோல் மன்னவ னுடைய நாடு நாளுக்கு நாள் சீரழியும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தனது நாட்டில் நிகழ்பவற்றை நாள்தோறும் ஆராய்ந்து அதற்குத் தக்க முறைகளைச் செய்யாத மன்னன் நாள்தோறும் நாட்டினை இழப்பான்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒவ்வொரு நாளும் நாட்டில் நடக்கும் நன்மை தீமைகளைத் தெரிந்து ஆய்ந்து ஆவன செய்யாத அரசன் ஆளும் நாடு நாளுக்கு நாள் தாழ்ந்து கெடும்.
|
|
Translation
|
|
Who makes no daily search for wrongs, nor justly rules, that king
Doth day by day his realm to ruin bring.
|
|
Explanation
|
|
The country of the king who does not daily examine into the wrongs done and distribute justice, will daily fall to ruin.
|
|
Transliteration
|
|
Naatorum Naati Muraiseyyaa Mannavan
Naatorum Naatu Ketum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|