Thirukural

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்கோலொடு நின்றான் இரவு.

ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
வேலொடு நின்றான் - ஆறலைக்கும் இடத்துத்தனியே வேல் கொண்டு நின்ற கள்வன், இடு என்றது போலும் - ஆறுசெல்வானை 'நின் கைப்பொருள் தா' என்று வேண்டுதலோடுஒக்கும், கோலொடு நின்றான் இரவு - ஒறுத்தல் தொழிலோடு நின்றஅரசன் குடிகளைப் பொருள் வேண்டுதல். ('வேலொடு நின்றான்' என்றதனால் பிறரொடு நில்லாமையும், 'இரவு' என்றதனால்இறைப்பொருள் அன்மையும் பெற்றாம், தாராக்கால்ஒறுப்பல் என்னும் குறிப்பினன் ஆகலின் இரவாற் கோடலும் கொடுங்கோன்மைஆயிற்று,இவை இரண்டு பாட்டானும் கொடுங்கோன்மையதுகுற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தனியிடத்தே வேலொடு நின்றவன் கையிலுள்ளன தா வென்றல்போலும்: முறைசெய்தலை மேற்கொண்டு நின்றவன் குடிகள்மாட்டு இரத்தல். கோலொடு நிற்றல்- செவ்வைசெய்வாரைப் போன்று நிற்றல். நிச்சயித்த கடமைக்குமேல் வேண்டுகோளாகக் கொள்ளினும். அது வழியிற் பறிப்பதனோடு ஒக்குமென்றவாறு.
தேவநேயப் பாவாணர் உரை:
கோலொடு நின்றான் இரவு - கொலைவரைத் தண்டிக்கும் அதிகாரத்தைத் தாங்கிய ஆட்சியொடு கூடிய அரசன் குடிகளிடம் பொருள் வேண்டுதல் ; வேலொடு நின்றான் இடு என்றது போலும் - கொல்லும் வேலை ஏந்திநின்ற வழிப்பறிக்கள்வன் வழிச்செல்வானை நோக்கி உன்கைப்பொருளைக் கீழே வை என்று சொல்வதனோ டொக்கும். அரசன் குடிகளிடம் அச்சுறுத்திக் கேளாவிடினும் ; குடிகள் கொடாவிடின் தப்பாது தண்டிக்கப்படுவர் . என்னும் குறிப்பிருத்தலால் , அவன் இரப்பதும் வழிப்பறிக்கள்வன் ஏவல் போன்றதே யென்றார் . 'வேலொடு நின்றான்' என்பதனால் வழிப்பறிக்கள்வன் தனியன் என்பதும் , 'இடு' என்னும் ஏவலொருமையால் வழிச்சொல்வோன் ஒன்றியென்பதும் , 'இரவு' என்றதனால் கொடுங்கோல் அரசன் இரப்பது குடிகள் முறைப்படி செலுத்தவேண்டிய புரவுவரியன்றென்பதும் பெறப்படும்.
கலைஞர் உரை:
ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
அதிகார பலத்தோடு கூடிய ஓர் அரசன் குடிகளிடத்தில் திடீரென்று வழக்கமில்லாது பொருள் கேட்பது ஆயுத பலத்தோடு மறைந்து நின்ற வழிப்பறிக்காரன் திடீரென்று தோன்றி, 'உன்னிடம் உள்ளதை யெல்லாம் போடு' என்று கொள்ளையடிப்பதற்குச் சமானம்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தண்டிக்கும் தொழிலோடு நின்ற அரசன் குடிமக்களிடம் பொருள் வேண்டிக் கேட்டல், வேற்படைகளுடனே தனியே நின்ற கள்வன் வழிப்போக்கனை நோக்கிக் கைப்பொருளினைத் 'தா' என்பதனோடு ஒக்கும்.
தமிழ்க்குழவி உரை:
ஆறலைக் கள்வர் வேல் கொண்டு மிரட்டி மக்களிடம் பொருள் பறிப்பது போன்றதே அரசு நடத்தும் மன்னன் மக்களைக் கொடுமைப்படுத்தித் தண்டம் (வரி) பெறுவது.
Translation
As 'Give' the robber cries with lance uplift, So kings with sceptred hand implore a gift.
Explanation
The request (for money) of him who holds the sceptre is like the word of a highway robber who stands with a weapon in hand and says "give up your wealth".
Transliteration
Velotu Nindraan Ituven Radhupolum Kolotu Nindraan Iravu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 552