|
குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
கொலை மேற்கொண்டாரின் கொடிது - பகைமை பற்றிக் கொல்லுதல்தொழிலைத் தம்மேற்கொண்டு ஒழுகுவாரினும் கொடியன், அலைமேற்கொண்டு அல்லவை செய்து ஒழுகும்வேந்து - பொருள்வெஃகிக் குடிகளை அலைத்தல் தொழிலைத் தன்மேற் கொண்டு முறைஅல்லவற்றைச் செய்து ஒழுகும் வேந்தன். (அவர் செய்வது ஒருபொழுதைத் துன்பம், இவன் செய்வது எப்பொழுதும்துன்பமாம் என்பதுபற்றி, அவரினும் கொடியன் என்றார். பால்மயக்கு உறழ்ச்சி .'வேந்து' என்பது உயர்திணைப்பொருட்கண் வந்த அஃறிணைச் சொல். 'அலை கொலையினும் கொடிது'என்பதாயிற்று.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
கொலைத்தொழிலை மேற்கொண்டவரினும் கொடியன், அலைத்தற்றொழிலை மேற்கொண்டு நீதியல்லாதன செய்து ஒழுகுகின்ற அரசன்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அலை மேற்கொண்டு அல்லவை செய்து ஒழுகும் . வேந்து - பொருளாசையாற் குடிகளை வருத்துந் தொழிலை மேற்கொண்டு முறையல்லாதவற்றைச் செய்தொழுகும் வேந்தன் ; கொலை மேற்கொண்டாரின் கொடிதே - பகைமையினாற் கொல்லுதல் தொழிலை மேற்கொண் டொழுகுவாரினுங் கொடியனேயாவன் .
சிறிது பொழுதே செய்யுங்கொலைத்துன்பத்தினும் எப்பொழுதும் செய்யும் அலைத்துன்பங் கொடிது என்பதாம் . 'வேந்து' பொருளால் உயர்திணையாயினும் சொல்லால் அஃறிணையாதலின் அஃறிணை முடிபு கொண்டது . ஏகாரம் தேற்றம் .
|
|
கலைஞர் உரை:
|
|
அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத்
தொழிலகாக் கொண்டவரைவிடக் கொடியதாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
குடிமக்களின் பொருள்மீது ஆசை கொண்டு அவர்களைத் துன்புறுத்தித் தவறாக ஆளும் அரசு பகைகொண்டு பிறரைக் கொலை செய்பவரைக் காட்டிலும் கொடியது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(கொடுங்கோன்மையாவது) குடிகளைத் துன்பப்படுத்திக் கொண்டு அரசனுக்குத் தகாத காரியங்களைச் செய்து வாழும் வேந்தன் கொலை பாதகர்களைவிடக் கொடியவன்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பொருளைக் கருத்தி நீதியற்ற முறையில் குடிமக்களிடம் அல்லாதவற்றைச் செய்தொழுகும் வேந்தன், கொலை செய்யும் தொழிலை மேற்கொண்டவர்களைவிடவும் கொடியவனாவான்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
கொலைத் தொழிலைக் கொண்டொழுகும் கொடியரினும் கொடுமையானவன் அறனல்லாதவற்றைச் செய்து மக்களை அலைக்கழிக்க ஆட்சி நடத்தும் அரசன்.
|
|
Translation
|
|
Than one who plies the murderer's trade, more cruel is the king
Who all injustice works, his subjects harassing
|
|
Explanation
|
|
The king who gives himself up to oppression and acts unjustly (towards his subjects) is more cruel than the man who leads the life of a murderer.
|
|
Transliteration
|
|
Kolaimerkon Taarir Kotidhe Alaimerkontu
Allavai Seydhozhukum Vendhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|