|
ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
மன்னவன் வென்றி தருவது வேல் அன்று கோல் - மன்னவனுக்குப் போரின்கண் வென்றியைக் கொடுப்பது அவன் எறியும் வேல் அன்று, கோல், அதூஉம் கோடாது எனின் - அஃதும் அப்பெற்றித்தாவது தான் கோடாதாயின். (கோல் செவ்விதாயவழியே 'வேல் வாய்ப்பது என்பார், 'வேல் அன்று' என்றார். 'மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்' (புறநா.55) என்றார் பிறரும். 'கோடான்' என்பது பாடம் ஆயின், கருவியின் தொழில் வினைமுதல்மேல் நின்றதாக உரைக்க)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அரசனுக்கு வெற்றி தருவது அவன் கையிலுள்ள வேலன்று, முறை செய்தல்; அவன் அதனைக் கோடச் செய்யானாயின்.
இது செங்கோன்மை செய்ய வெற்றியுண்டாமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
மன்னவன் வென்றி தருவது வேல் அன்று கோல் - அரசனுக்குப் போரின்கண் வெற்றியைக் கொடுப்பது வேற்படையன்று , அவன் அரசாட்சியே ; அதுவும் கோடாது எனின் - அவ்வரசாட்சியும் அங்ஙனஞ் செய்வது அறநெறிதவறாதிருந்த பொழுதே.
"அறநெறி முதற்றே அரசின் கொற்றம்" என்றார் மதுரை மருதனிளநாகனார் ( புறம் . 55) . வெற்றிதருவது வேலன்று கோல் என்னும் எதுகை நயமும் , எறியும் வேலன்று ஏந்தும் கோலே யென்னும்முரண்நயமும் , கவனிக்கத்தக்கன . அதூஉம் இன்னிசை யளபெடை . மணக்குடவர் 'கோடா னெனின்' என்று பாடங்கொள்வர் . அப்பாடத்திற்கு , கருவியின் வினை சினைவினை போல முதல் வினைமேல் நின்றதாகக் கொள்க .
'கோல் அதூஉம்' என்பது போன்றே , 'இல்வாழ்க்கை அஃதும்' ( 46) என்னும் தொடரும் அமைந்திருத்தலை , ஒப்புநோக்கி யுணர்க.
|
|
கலைஞர் உரை:
|
|
ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல;
குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அரசனுக்கு) வெற்றி தருவது அவனுடைய ஆயுத பலம் அல்ல. ஆட்சி முறைதான்; அதுவும், அந்த ஆட்சி முறை நீதி நெறி தவறாத செங்கோலாக இருந்தால்தான்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
மன்னனுக்குப் போரில் வெற்றியினைக் கொடுப்பது அவன் எறியும் வேல் அல்ல, செங்கோலேயாகும். அக்கோலும் கோணாது இருக்குமானால் என்பதாம்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒருமன்னரின் வெற்றிக்குக் காரணமாக அமைவது படைபலமன்று. அறம்பிறழாத ஆட்சி முறையே ஆகும்.
|
|
Translation
|
|
Not lance gives kings the victory,
But sceptre swayed with equity.
|
|
Explanation
|
|
It is not the javelin that gives victory, but the king's sceptre, if it do no injustice.
|
|
Transliteration
|
|
Velandru Vendri Tharuvadhu Mannavan
Koladhooung Kotaa Thenin
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|