|
நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பெயலும் விளையுளும் தொக்கு - பருவமழையும் குன்றாத விளைவும் ஒருங்கு கூடி, இயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட - நூல்கள் சொல்லிய இயல்பால் செங்கோலைச் செலுத்தும் அரசனது நாட்டின் கண்ணவாம். ('உளி' என்பது மூன்றாவதன் பொருள்படுவதோர் இடைச்சொல், வானும் நிலனும் சேரத் தொழிற்பட்டு வளம் சுரக்கும் என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
மழைபெய்தலும் விளைதலுங்கூடி. நூல் சொன்ன இயல்பினானே முறையை
நடத்தவல்ல அரசனது நாட்டகத்தினவாம்.
இது மேற்கூறிய முறைமைசெய்ய மழையும் விளைவும் உண்டாமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பெயலும் விளையுளும் தொக்கு - பருவமழையும் குன்றாத விளைவும் ஒருங்கு திரண்டு ; இயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட - முறைப்படி செங்கோலாட்சி செய்யும் அரசனது நாட்டில் உள்ளனவாம்.
'கோலோச்சும்', 'மன்னவன்' என்பனவற்றிற்கு முன்பு உரைத்த வாறு உரைக்க . செங்கோலரசன் மண்ணுலகில் இறைவனின் படிநிகராளியா யிருத்தலால் , இயற்கையும் அவனுக்கு அடங்கி நடக்கும் என்பதாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது,
பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல்
கிடைப்பதற்கு ஒப்பானதாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அரச நீதிநூல்கள் கூறியபடி, நேர்மையாக ஆளும் ஆட்சியாளரிடம் பருவமழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்தே இருக்கும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அப்படிப்பட்ட ஆட்சியில் தர்மங்கள் மிகுவதால்) நீதி நெறி முறைப்படி அரசு நடத்துகிற மன்னவனுள்ள நாட்டில் பருவவிளை பொருள்களும் சரியாக இருக்கும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நூல்கள் சொல்லிய இயல்பால் செங்கோலினைச் செலுத்தும் மன்னனது நாட்டில் பருவ மழையும் குன்றாத விளைச்சலும் ஒருங்கே சேர்ந்து இருப்பனவாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அறம் பிறழாமல் நல்லரசு நடத்தும் மன்னவர் நாட்டில்பருவ மழையும் குறைவில்லா விளைச்சலும் குன்றாது வாய்க்கும்
|
|
Translation
|
|
Where king, who righteous laws regards, the sceptre wields,
There fall the showers, there rich abundance crowns the fields.
|
|
Explanation
|
|
Rain and plentiful crops will ever dwell together in the country of the king who sways his sceptre with justice.
|
|
Transliteration
|
|
Iyalpulik Kolochchum Mannavan Naatta
Peyalum Vilaiyulum Thokku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|