|
உள்ளத்தில் அச்சம் உடையவர்க்குப் புறத்திலே அரண் இருந்து பயன் இல்லை, அதுபோல் மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அரண் அச்சம் உடையார்க்கு இல்லை - காடு மலை முதலிய அரண்களுள்ளே நிற்பினும், மனத்தின்கண் அச்சமுடையார்க்கு அவற்றால் பயன் இல்லை, ஆங்கு நன்கு பொச்சாப்பு உடையார்க்கு இல்லை - அதுபோலச் செல்வமெல்லாம் உடையராயினும், மனத்தின்கண் மறவியை உடையார்க்கு அவற்றால் பயன் இல்லை. (நன்மைக்கு ஏதுவாகலின் 'நன்கு' என்றார். அச்சமுடையார் நின்ற அரண் அழியுமாறு போல, மறவி உடையாருடைய செல்வங்களும் அழியும் என்பதாயிற்று.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அச்சமுடையார்க்கு ஆவதொரு அரணில்லை: அதுபோலப் பொச்சாப்புடையார்க்கு வருவதொரு நன்மை இல்லை.
இது பொச்சாப்புடையார்க்குக் காவலில்லை என்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அச்சம் உடையார்க்கு அரண் இல்லை - உள்ளத்தில் அச்சமுடையவர்க்கு மதில் காடு மலை முதலிய அரண்களிருப்பினும் அவற்றாற் பயனில்லை ; ஆங்கு - அதுபோல ; பொச்சாப்பு உடையார்க்கு நன்கு இல்லை - மறவியுடையார்க்குப் படை செல்வம் முதலிய நலங்களிருந்தும் அவற்றாற் பயனில்லை.
அச்ச முடையார்க்கு அழிவு நேர்வது போல் மறவியுடையார்க்கும் நேர்வது உறுதி என்பது கருத்து. நன்மைக்கேது வானது நன்கு . நல் - நன் - நன்கு.
|
|
கலைஞர் உரை:
|
|
பயத்தினால் நடுங்குகிறவர்களுக்குத் தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்கான
அரண் கட்டப்பட்டிருந்தாலும் எந்தப் பயனுமில்லை. அதைப் போலவே
என்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் மறதி உடையவர்களுக்கு அந்த
நிலையினால் எந்தப் பயனுமில்லை.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
மனத்துள் பயம் உள்ளவர்க்கு எத்தகைய பாதுகாப்பாலும் பயன் இல்லை. அதுபோலவே மறதி உடையவர்க்கும் பாதுகாப்பால் பயன் இல்லை.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(வேறு குற்றங்கள் செய்யாவிடினும் மறந்திருப்பதே ஒருவனைக் கெடுத்துவிடும்.) பயங்கொள்ளிகள் எவ்வளவு பாதுகாப்பான இடத்திலிருந்தாலும் அவர்களுடைய பயமே அவர்களைக் குலைத்துவிடும். அதுபோல் எவ்வளவு சுகத்தி லிருந்தாலும் கடமைகளை மறந்திருக்கும் குற்றமே ஒருவனைக் கெடுத்து விடும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
சிறந்த அரண் என்னும் கோட்டை இருந் தாலும்மனத்தில் அச்சம் உடையவர்களுக்கு அதனால் பயன் இல்லை. அதுபோல, செல்வமெல்லாம் உடையவராயினும் மனத்தில் மறதியுடையவர்களுக்கு அதனால் பயனில்லை.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
எதற்கும் அஞ்சி நடுங்குபவர்க்கு உலகில் பாதுகாப்பில்லை. அதுபோல மறதியுடையவர்க்கு நல் வாய்ப்புகள் அமைவதில்லை.
|
|
Translation
|
|
'To cowards is no fort's defence'; e'en so
The self-oblivious men no blessing know.
|
|
Explanation
|
|
Just as the coward has no defence (by whatever fortifications ha may be surrounded), so the thoughtless has no good (whatever advantages he may possess).
|
|
Transliteration
|
|
Achcha Mutaiyaarkku Aranillai Aangillai
Pochchaap Putaiyaarkku Nanku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|